ADDED : அக் 02, 2025 11:08 PM

கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் எம்.யோகேந்திரா. இவர், மத்திய வரி மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது, மைசூரு தடகள கழகத்தின் செயலராக உள்ளார். இவர் சிறுவயதில் இருந்தே தடகள போட்டிகளில் விளையாடி வருகிறார். பல நாடுகளில் நடந்த உலக அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு நம் நாட்டிற்கு பதக்கங்களை வாங்கி குவித்து உள்ளார்.
யோகேந்திரா அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளில் நடந்த 'உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டி'களில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்று உள்ளார். குறிப்பாக, 20வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2017ல் சீனாவில் நடந்தது. இதில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றார்.
இவர் நீண்ட துாரம் ஓடும் ஆற்றல் கொண்டவர். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடக்கும் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மைசூரு பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேசிய அளவிலான தடகள போட்டியில் கர்நாடகா சார்பாக ஆறு முறை போட்டியிட்டு உள்ளார்; பல பதக்கங்களை பெற்று உள்ளார்.
இவர் சுங்கத்துறையில் நடக்கும் மத்திய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில், தென் மண்டலத்தின் சார்பாக போட்டியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். யோகேந்திரா, 46 ஆண்டுகளாக தடகள போட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை 60 தங்கம், 50 வெள்ளி, 48 வெண்கல பதக்கங்களை பெற்று உள்ளார். இத்தனை பரிசுகளை வாங்கியவர், அடுத்து சென்னையில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
வரும் நவம்பர் 5 முதல் 9ம் தேதி வரை சென்னையில் நடக்கும், ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்கிறார்
- நமது நிருபர் - .