ADDED : அக் 02, 2025 11:09 PM

பெங்களூரு மாச்சோஹள்ளியில் உள்ளது வித்யா சன்ஸ்கார் இன்டர்நேஷனல் பள்ளி. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி எம்.எஸ்.கீர்த்தி, 15. இவர் தனது 8 வயதில் இருந்தே டேக்வாண்டோ பயிற்சி செய்து வருகிறார். மாஸ்டர்கள் ஜோதிமணி, ஹர்ஷா ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.பள்ளி அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.
இதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். வீரம், விவேகத்துடன் செயல்படுவதால், மாவட்ட அளவிலான போட்டிகளில் சுலபமாக வெற்றி பெற்று வருகிறார். இதனால், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
குறிப்பாக, கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடந்த சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் தங்க பதக்கங்கள் பெற்று அசத்தினார். 40வது கர்நாடக மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம்; கேலோ இந்தியா மகளிர் லீக்கில் இரண்டு முறை தங்க பதக்கம் ஆகிய பதக்கங்களை வெற்றி பெற்றார்.
இதன் மூலம் தனது பதக்க வேட்டையைதொடர்ந்தார். சமீபத்தில், உத்தர பிரதேசத்தில் நடந்த சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான தேசிய அளவிலான 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், தங்க பதக்கத்தை வென்றார்.இதன் மூலம், வரும் நவம்பரில் ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கர்நாடகாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.
நம் மாநிலத்தின் சார்பாக பங்கேற்கும் ஒரே வீராங்கனையாகவும் உள்ளார்.
இந்த போட்டியில் கீர்த்தி வெற்றி பெற்றால், அந்த வெற்றி கீர்த்திக்கு மட்டுமின்றி மாநிலத்துக்கும் பெருமையை தேடி தரும்.
இது குறித்து கீர்த்தி கூறுகையில், “நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதற்காக கடுமையான பயிற்சியில் இறங்கி உள்ளேன். சிறு வயதிலிருந்தே பயிற்சி செய்து வருகிறேன். என் முயற்சி வீண் போகாது,'' என்றார்
- நமது நிருபர் -.