ADDED : மே 02, 2025 05:51 AM

இந்திய கிரிக்கெட் அணியில் கர்நாடகாவை சேர்ந்த அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் ஸ்ரீநாத் போன்ற முன்னாள் வீரர்கள் ஜொலித்து உள்ளனர். தற்போதைய அணியில் ராகுல் மட்டும், ஓரளவு நிலையான இடத்தை பிடித்து உள்ளார்.
ராகுலுடன் இணைந்து கர்நாடக அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால், மனீஷ் பாண்டே உள்ளிட்டோர், இந்திய அணிக்கும் விளையாடினர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால், அவர்களுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
கர்நாடக அணிக்கு தற்போது கேப்டனாக இருக்கும், மயங்க் அகர்வால் சிறந்த ரஞ்சி கிரிக்கெட் வீரர். அங்கு நிறைய சாதனைகள் படைத்ததால், அவருக்கு கடந்த 2018ல், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்தார். கடந்த 2020ல் ஒருநாள் அணியிலும் அறிமுகம் ஆனார். தற்போது வரை 21 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மட்டும் விளையாடி உள்ளார். கடந்த 2020க்கு பின் ஒருநாள் அணியிலும்; கடந்த 2022க்கு பின் டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் ஐ.பி.எல்., போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்தார். ஏலத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்ட அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் இந்த ஆண்டு ஐ.பி.எல்., போட்டி விளையாடவில்லை.
இந்நிலையில் மயங்க் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணாடி பார்ப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, 'முக்கியமான ஒரே போட்டி' என்று பதிவிட்டு உள்ளார். இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் குழப்பமாக உள்ளனர்.
இந்திய கிரிக்கெட், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட இடம் கிடைக்காததால், தனது விரக்தியை அவர் வெளிப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. மயங்க் அகர்வாலுக்கு தற்போது 34 வயதாகி விட்டது. மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், அவரால் எத்தனை ஆண்டு விளையாட முடியும் என்பது தான் கேள்வியாக உள்ளது.
- நமது நிருபர் -

