UPDATED : பிப் 27, 2025 09:09 AM
ADDED : பிப் 22, 2025 05:30 AM

தமிழகம், கர்நாடகா உணவுகளை விட ஆந்திர உணவுகள் சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு அதிக காரம் சேர்ப்பர். மேலும் விதவிதமான 'சைடு டிஷ்'களும் அங்கு செய்வர்.
பொதுவாக நமது வீடுகளில் தேங்காய், தக்காளி, மல்லி, புதினா, கொத்தமல்லி, வேர்க்கடலை வகை சட்னிகளை தான் அதிகம் அரைத்து இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், ஆந்திராவில் வித்தியாசமாக, கோவைக்காயில் சட்னி செய்கின்றனர்.
அந்த ஊர் ஸ்பெஷலும் இதுதான். எப்போதும் ஒரே வகை சட்னியை சாப்பிடும் நாமும் ஒருமுறை ஆந்திரா ஸ்டைல் கோவைக்காய் சட்னி செய்து பார்க்கலாம்.
பொதுவாக கோவைக்காயில் உடம்புக்கு தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆனால் ஒரு சிலருக்கு கோவக்காயில் எது செய்தாலும் சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் கூட சட்னி செய்து கொடுத்தால் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர். இட்லி, தோசை, சப்பாத்தி, சுட சுட சாதத்திற்கு கூட இந்த சட்னியை பயன்படுத்தி சாப்பிடலாம்.
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய கோவைக்காய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். கோவைக்காய் நிறம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கொண்டு இருக்க வேண்டும். பின், கொத்தமல்லி இலை, பெருங்காய பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், தனியாக எடுத்து வைத்துவிட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவைக்காய் சட்னி தயார்.
கோவைக்காயை நன்கு பொன்னிறமாக வறுத்தால் மட்டுமே, இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இதை மறந்து விட வேண்டாம்