ADDED : ஏப் 18, 2026 05:55 AM

- நமது நிருபர் -: நம் வீட்டில் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ பிறந்தநாள் வந்தால், இனி கடைக்கு சென்று கேக் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, வீட்டிலேயே எளிய முறையில் மிகவும் சத்தான வகையில் கேக் செய்யலாம். அதுவும் ஊட்டச்சத்து மிகுந்த பால் பழம் கேக்கை செய்து அசத்தலாம். இதை செய்வது எளிது. சுவையோ அரிதோ அரிது.
தேவையான பொருட்கள்
* விதையில்லா கருப்பு திராட்சை - 10
* ஸ்டாபெரி - 5
* கிவி - 3
* வாழைப்பழம் - 1 பெரியது
* கமலா ஆரஞ்சு - 1
* பால் - 1 லிட்டர்
* தயிர் - 1 கப்
* மில்க் மெய்ட் - தேவையான அளவு
* அகர், அகர் - 1 டீஸ்பூன்
செய்முறை
விதையில்லா கருப்பு திராட்சை, ஸ்டாபெரி, கிவி, வாழை, கமலா ஆரஞ்ச் ஆகிய பழங்களை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். இதை கேக் செய்வதற்கான மோல்டில் ஒவ்வொன்றாக தனித்தனியாக வைக்க வேண்டும். இதனிடையே, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அகர், அகர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில், தேவையான அளவு மில்க் மெய்ட் சேர்க்க வேண்டும்.
பின், ஒரு பாத்திரத்தில் கட்டியான தயிரை ஊற்ற வேண்டும். இதில், காய்ச்சிய பாலின் சூடு ஆறுவதற்குள் அப்படியே ஊற்ற வேண்டும். இதில், வெட்டிய பழத்துண்டுகளை சேர்த்து லேசாக கலக்கவும். இக்கலவையை ஏற்கனவே வைத்துள்ள கேக் மோல்ட்டில் ஊற்றவும்.
பின், கேக் மோல்ட்டை குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு பின், கேக் மோல்ட்டை வெளியில் எடுத்தால், பால் பழம் கேக் தயார். இதை பார்க்கும் போதே அப்படியே சாப்பிட்டுவிடலாம் என தோன்றும். இந்த கேக்கை சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருக்கலாம் என தோன்றும். கீழே வைப்பதற்கு மனதே வராது.
