ADDED : செப் 26, 2026 03:29 AM

- நமது நிருபர் -
ஹாசனில் வசிப்பவர் ஆஷா. இவர், 'அடுகே சாதனா' என்ற பெயரில், யுடியூப் சேனல் நடத்துகிறார். சமையல் குறிப்புகள், வகை, வகையாக ருசியாக சமையல் செய்வது எப்படி என்பது குறித்தும், 'டிப்ஸ்' கொடுக்கிறார்.
கடந்த, 2020ல் யுடியூப் சேனல் துவங்கிய இவர், இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட சமையல் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதில் பெரும்பாலான வீடியோக்கள், தமிழகத்தின் பாரம்பரிய உணவு சுவையை வெளிப்படுத்துபவை தான்.
தாய் பத்மாவிடம் இருந்து பாரம்பரிய கர்நாடக உணவுகள் சமைக்க கற்று கொண்ட ஆஷா, மாமியார் ரத்தினத்திடம் இருந்து தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை சமைக்கவும் கற்று கொண்டார்.
தமிழகத்தில் புளிக்குழம்பு, பருப்பு குழம்பு, காரக்குழம்பு, ரசம், அடை, பொங்கல், தக்காளி சாதம், கோவில் புளியோதரை, தேங்காய் சாதம், சீரக சம்பா பிரியாணி, சாம்பார் சாதம் போன்றவற்றை தனது வீடியோக்கள் வாயிலாக, மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறார்.
கர்நாடகாவில் பெரும்பாலும் பெரிய தட்டு இட்லி தான் விற்பனை செய்யப்படும்.
ஆனால், ஆஷா தனது வீடியோவில் தமிழகத்தில் செய்யப்படும் சிறிய இட்லி, அதற்கு சுவையாக எந்தெந்த சட்னிகள் அரைக்கலாம் என்பது பற்றி எடுத்து சொல்கிறார்.
இதுகுறித்து ஆஷா கூறியதாவது:
நான் கல்லுாரியில் படிக்கும் போது இருந்தே சமையல் மீது ஆர்வம் வந்தது. சமையல் தொடர்பான, அடுகே மனே நிகழ்ச்சியை ஆர்வமாக பார்ப்பேன். அம்மாவிடம் இருந்தும், திருமணத்திற்கு பின், மாமியாரிடம் இருந்தும் நிறைய கற்று கொண்டேன்.
என் மகன் குழந்தையாக இருந்த போது, மொபைல் போனில், யுடியூப் வீடியோக்களை பார்ப்பார்.
அதில் வரும் உணவை தனக்கும் செய்து கொடுக்கும்படி கேட்டு கொண்டே இருப்பார். அவருக்காக நான் செய்த சமையல் தான், யுடியூப் சேனல் ஆரம்பிக்க உத்வேகமாக அமைந்தது. எனக்கு தெரிந்த சமையல்கள், குறிப்புகளை பற்றி, மற்றவர்களுக்கு சொல்லி தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
