மேற்குவங்கத்தில் பிரபலமான பெங்காலி பசந்தி புலாவ்
மேற்குவங்கத்தில் பிரபலமான பெங்காலி பசந்தி புலாவ்
ADDED : ஜன 17, 2026 07:14 AM

ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான உணவு வகைகள் பிரபலம். மேற்குவங்க மாநிலத்தில், 'பெங்காலி பசந்தி புலாவ்' பிரபலம். அந்த உணவு வகையை செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவிந்த போக் அரிசி அல்லது பாசுமதி அரிசி -1 கப்
மஞ்சள் துாள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
கிராம்பு - 5
முந்திரிப்பருப்பு - 10
உலர் திராட்சை - 10
பச்சை மிளகாய் - 3
நெய் - 100 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
அனைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கோவிந்த போக் அரிசி கிடைக்கும். இதில், செய்யும் போது அதே மாதிரியான சுவையை பெற முடியும். ஒருவேளை உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் பாசுமதி அரிசியைப் பயன்படுத்தலாம்.
செய்முறை
பசந்தி புலாவ் செய்வதற்கு எந்த அரிசியை எடுத்துள்ளீர்களோ? அதை இரண்டு முறை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். இதை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி அரை டீஸ்பூன் மஞ்சள், நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
ஒரு பெரிய வானலியில் நெய் உருகியதும், முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். முந்திரியை வறுத்தவுடன் உலர் திராட்சையும் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்னர் அதே வானலியில் நெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வைத்த அரிசியையும் உடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு சில நிமிடங்களுக்கு பின், இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இதனுடன் பச்சை மிளகாயை கீறி சேர்க்க வேண்டும். உணவிற்கு கொஞ்சம் காரத்தைக் கொடுக்கும். வாணலியை மூடியால் இறுக்கமாக மூடிக் கொள்ளவும். 10 நிமிடங்களுக்கு பின் அரிசி வெந்தவுடன், அதனுடன் வறுத்து வைத்த முந்திரி, உலர் திராட்சை மேல் துாவினால், சுவையான பெங்காலி பசந்தி புலாவ் தயார்.
- நமது நிருபர் -:

