ADDED : ஜன 17, 2026 07:12 AM

தினமும் காலையில், நாம் சாப்பிடும் சிற்றுண்டி, சத்தானதாக இருக்க வேண்டும். சிறார்களுக்கும் ஊட்டச்சத்தான சிற்றுண்டி அவசியம். குறிப்பாக, கேழ்வரகு மிகவும் சத்தானது. நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என, பல்வேறு சத்துக்கள் உள்ளன. கேழ்வரகில் பல விதமான சிற்றுண்டிகள் செய்யலாம். குறிப்பாக கேழ்வரகு உப்பு உருண்டை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு - ஒரு கப்
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுந்து - ஒன்றரை ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒன்றரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து, சீரகம்,, கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். உளுந்தும், கடலைப்பருப்பும் நன்றாக சிவந்த பின், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின், சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையும் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
அதன்பின் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க துவங்கியதும், ராகி மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும். மாவு கெட்டியான பதத்துக்கு வந்த பின், அடுப்பில் இருந்து இறக்கவும். கை பொறுக்கும் அளவுக்கு சூடு ஆறிய பின், சிறு சிறு உருண்டைகளாகவோ அல்லது கொழுக்கட்டை போன்று பிடிக்கவும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி மூடவும்.
தண்ணீர் கொதித்த பின், ஏற்கனவே தயார் செய்துள்ள உருண்டைகளை, இட்லி தட்டில் வைத்து மூடி, மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்தால், ராகி உப்பு உருண்டை தயார். இதனை காலை டிபனுக்கோ அல்லது குட்டீஸ்கள் பள்ளி முடிந்து வந்த பின்னரோ, தயாரித்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர்.
தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ், சாம்பார் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். ராகி உப்பு உருண்டையை எதுவும் தொட்டுக்கொள்ளாமலும் சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

