கருப்பு கவுனி லட்டும் வரகு பர்பியும்! சத்தான ஸ்வீட்டால் அசத்துங்க மம்மீஸ்!
கருப்பு கவுனி லட்டும் வரகு பர்பியும்! சத்தான ஸ்வீட்டால் அசத்துங்க மம்மீஸ்!
UPDATED : நவ 07, 2026 12:38 PM
ADDED : நவ 07, 2026 12:36 PM

இந்த தீபாவளிக்கு வழக்கமான இனிப்புகளை விட, சத்தான இனிப்புகளை தயார் செய்து குடும்பத்தினரை அசத்தலாமே!
வரகு பர்பி
வரகை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, வறுத்து அரைக்க வேண்டும். பின்பு அரைத்த மாவை பச்சை வாசம் போகும் வரை பாத்திரத்தில் வறுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி வெல்லம் சேர்த்து வெல்லத்தைக் கரைத்து விடவும். அதில் நெய் சேர்த்து, பின் வறுத்த மாவைச் சேர்க்கவும். சிறிது ஒட்டும் பதத்திற்கு வரும் போது நெய் சேர்த்துக் கலந்து விடவும். சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கலக்க வேண்டும். பின்பு ஒரு தட்டில் நெய் தடவி வைக்க வேண்டும். அதில் இந்தக் கலவையைச் சேர்க்க வேண்டும். ஆறவிட்டால் சுவையான வரகு பர்பி ரெடி .
குலுக்கு ரொட்டி
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்துக் கரைத்து விட வேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் ராகி மாவைச் சேர்த்து, அதில் இந்தப் பாகைச் சேர்த்து சிறிது உப்பு போட வேண்டும். இது வெல்லத்தின் சுவையை சற்று தூக்கிக் கொடுக்கும். இதைச் சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைந்து, உருண்டைகளாக்கி ஆவியில் வேக வைக்க வேண்டும். முன்பு செய்த பாகில் இந்த உருண்டைகளைப் போட வேண்டும். அதில் ஏலக்காய்த் தூள், தேங்காய்ப்பால் போன்றவற்றைச் சேர்க்கவும். இதை ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து எடுத்து சுவைக்கலாம்.
ராகி இனிப்பு இலை அடை
ஒரு பாத்திரத்தில் நெய், பாதாம், முந்திரி, கேரட் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு வெல்லப்பாகைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி, பின்பு ராகி மாவைச் சேர்த்துக் கலக்கவும். பின்பு ஏலக்காய் தூள் சேர்த்த பிசைந்து வாழை இலையில் மெல்லியதாக பரப்பி, உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.
கருப்பு கவுனி லட்டு
கருப்பு கவுனி அரிசியை வறுத்து வைக்க வேண்டும். பின்பு மாப்பிள்ளை சம்பா, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி, குள்ளக்கார் அரிசி, கருங்குறுவை அரிசி ஆகியவற்றை வறுக்க வேண்டும். ஏலக்காய், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி, ஏலக்காய், திராட்சை போட்டு வதக்க வேண்டும். இதை மாவில் சேர்த்து கலந்து உருண்டைகளாக்க வேண்டும்.
வரகு அரிசி துளி
வரகு அரிசியை ஊறவைத்து, காயவைத்து அரைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் இந்த மாவைச் சேர்த்து வதக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இந்த மாவை அதில் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதிலேயே வெல்லப்பாகு, ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும். பின்பு வறுத்து வைத்துள்ள தேங்காய், பாதாம், முந்திரி, நெய் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
மரவள்ளி மிட்டாய்
மரவள்ளிக் கிழங்கை துருவி, துணியில் கட்டி பிழிந்து எடுக்கவும். பிழிந்து எடுத்த கிழங்குடன் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து பிசைந்து வாழை இலையில் வைத்து உருட்டி எடுத்துக்கொள்ளலாம். இதை ஆவியில் வேகவைத்து ருசிக்கலாம்.
வரகு மிட்டாய்
வரகு அரிசியை குறைந்த தீயில் வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து விடவும். பின்பு வறுத்து வைத்திருந்த வரகின் மேல் இந்தப் பாகைச் சேர்த்துக் கலந்து விடவும். ஒரு தட்டில் நெய் தடவி வைக்க வேண்டும். அதில் இந்தக் கலவையைச் சேர்த்துப் பரப்பி விட வேண்டும். ஆற வைத்தால் வரகு மிட்டாய் தயார்.
ேஹப்பி தீபாவளி!
