ADDED : ஏப் 18, 2026 05:53 AM

- நமது நிருபர் -
பொதுவாக ஆம்லெட் என்றால், முட்டை பயன்படுத்தி செய்யும் சிற்றுண்டி என, அனைவரும் நினைப்பர். முட்டை இல்லாமலும், வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி, சுவையான ஆம்லெட் செய்யலாம். அதை எப்படி செய்வது என, தெரிந்து கொள்ளலாமா.
தேவையான பொருட்கள்
* ரவை - 1 கப்
* தயிர் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* கேரட் - 1
* ஸ்வீட் கார்ன் - 2 ஸ்பூன்
* குட மிளகாய் - அரை கப்
* பீன்ஸ் - 5
* வெங்காயம் - 1
* கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
* சில்லி பிளேக்ஸ் - அரை ஸ்பூன்
* இனோ - அரை ஸ்பூன்
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* வெண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அகலமான பாத்திரத்தில் ரவை, தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் சிறிதளவு நீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும். இதை, 10 நிமிடம் மூடி வைக்கவும்.
அதன்பின் இந்த கலவையில், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம், கொத்துமல்லி, சில்லி பிளேக்ஸ், ஸ்வீட் கார்ன் சேர்த்து பிசையவும். அடுப்பில் வாணலி வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மாவில், இனோ சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மாவு நுரைத்து வரும் போது, அதை வாணலியில் போட்டு பரப்பி விட்டு, சிறிது நேரம் மூடி மிதமான தீயில் வேக வைக்கவும். அதன்பின் திருப்பி போட்டு தோசைக்கரண்டியால் அழுத்தி விடவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின், அதன் நடுவில் கிழித்து வெண்ணெய் ஊற்றவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை துாவினால், சுவையான வெஜ் ஆம்லெட் தயார்.
இதனை சூடாக சாப்பிட்டால், அதிக சுவையுடன் இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். பள்ளி விட்டு வரும் குட்டீஸ்களுக்கு செய்து தரலாம். விரும்பி சாப்பிடுவர். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு, இது பெஸ்ட் சாய்ஸ். வீட்டுக்கு திடீர் விருந்தாளி வரும் போது, செய்து கொடுத்து அசத்துங்கள்.

