ADDED : ஆக 08, 2026 06:58 AM

- நமது நிருபர் -
பலாப்பழத்தில் அல்வா, பாயாசம் என, பல விதமான இனிப்புகள் செய்யலாம். அதே போல, பலாக்காய் பிரியாணி சைவ பிரியர்களுக்கு, மிகவும் பிடிக்கும். சிக்கன், மட்டன் பிரியாணியை விட அதிக சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா...
தேவையான பொருட்கள்
l பலாக்காய் - 500 கிராம்
l பாஸ்மதி அரிசி - 2 கப்
l வெங்காயம் - 3
l தக்காளி - 2
l தயிர் - அரை கப்
l இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
l பச்சை மிளகாய் - 3
l புதினா - 1 கப்
l கொத்தமல்லி - 1 கப்
l மிளகாய் துாள் - 1 ஸ்பூன்
l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்
l தனியா துாள் - 1 ஸ்பூன்
l கரம் மசாலா - 1 ஸ்பூன்
l பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
l லவங்கம் - 4
l ஏலக்காய் - 4
l பிரியாணி இலை - 2
l நெய் - 2 ஸ்பூன்
l எண்ணெய் - 3 ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
l பட்டை - 2 துண்டு
l எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பலாக்காயை தோல் நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில், 10 நிமிடம் வேக வைக்கவும். அதன்பின் நீரை வடிகட்டி, காய்களை தனியாக வைத்து கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி, 30 நிமிடம் ஊற வையுங்கள்.
குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றவும். சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலையை போடவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதில் தக்காளி, புதினா இலைகளை போட்டு வதக்கவும்.
ஏற்கனவே வேக வைத்த பலாக்காய் துண்டுகளை போடவும். மிளகாய்துாள், மஞ்சள் துாள், தனியா துாள், பிரியாணி மசாலா, கரம் மசாலா, தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் வேகவிடவும்.
அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை போட்டு, நன்கு கிளறி, குக்கரை மூடவும். 25 முதல், 30 நிமிடம் வேக வைத்தால், சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி.
பலாக்காய் பிஞ்சாக இருந்தால், சுவை அதிகமாக இருக்கும். பலாக்காயை அதிக நேரம் வேக வைக்க கூடாது. அப்படி வேக வைத்தால் காய் உடைந்துவிடும். குங்குமப்பூ அல்லது ரோஜா ஊற வைத்த நீரை பிரியாணியில் சேர்த்தால், நறுமணம் வீட்டையே துாக்கும்!
