ADDED : செப் 05, 2026 03:27 AM

- நமது நிருபர் -
: முலாம் பழம், வெறும் கோடைக்கால பழம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை தரும் சிறந்த ஊட்டச்சத்து பெட்டகம். இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமான பிரச்னை, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இன்னும் பல மருத்துவ சத்து கொண்ட முலாம் பழத்தில், சூப்பரான அல்வா செய்யலாம். எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை முலாம் பழத்தின் தோலை நீக்கி உள்ளே இருக்கும் விதைகளை முழுமையாக அகற்ற வேண்டும். பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து அடி கனமான வாணலியை வைத்து, நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மீண்டும் நெய் ஊற்றி, முலாம் பழ விழுதை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, முலாம் பழ விழுதை நன்கு கிளறவும். பழத்தில் உள்ள தண்ணீர் சுண்டி, பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் வரை வதக்கலாம்.
பழ விழுது ஓரளவு கெட்டியானதும், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து அல்வா சற்று இளகி வரும். அப்போது சோள மாவை தண்ணீரில் நன்கு கரைத்து, கட்டியில்லாமல் ஊற்ற வேண்டும். கலவை கெட்டியாகும் போது, இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், ஊற்றிய நெய் ஓரங்களில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறவும். பின், அல்வா பதத்திற்கு வந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவு தான் சுவையான, வாசமான முலாம் பழ அல்வா ரெடி. சூடாக சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்து ஜில்லென ஆனதும் பரிமாறலாம்!
