UPDATED : அக் 10, 2026 04:30 AM
ADDED : அக் 09, 2026 07:54 PM

- நமது நிருபர் -
இன்றைய அவசரமான வாழ்க்கையில் சுவையுடன் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காலை சிற்றுண்டி ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். வாழைப்பழம் - ஓட்ஸ் டிக்கி செய்து பாருங்கள். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
l ஓட்ஸ் மாவு - 1 கப்
l வாழைப்பழம் - 1
l கோதுமை மாவு - 1 கப்
l சர்க்கரை பொடி - 1 கப்
l கொப்பரை துருவல் - அரை கப்
l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
l நெய் - 1 கப்
l பாதாம் - 25 கிராம்
l முந்திரிப்பருப்பு - 25 கிராம்
l உலர்ந்த திராட்சை - 25 கிராம்
l கசகசா - 1 ஸ்பூன்
l உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில், சிறிதாக நறுக்கிய வாழைப்பழம், ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, சர்க்கரை பொடி, கொப்பரை துருவலை சேர்த்து, நன்றாக கலக்கவும். இந்த கலவையில் ஏலக்காய் துாள், உப்பு, சிறிதாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, பாதாம், உலர்ந்த திராட்சை, கசகசாவை போட்டு மிருதுவாக பிசையவும்.
இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கவும். உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்தி டிக்கி எனும் வட்ட வடிவ துண்டுகளாக பிடிக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, சிறிது நெய் ஊற்றுங்கள். சூடானதும் இந்த டிக்கிகளை போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான ஓட்ஸ், வாழைப்பழம் டிக்கி தயார்.
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் தானியத்தில் ஊட்டச்சத்து அதிகம். குழந்தைகளுக்கு நல்லது. டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்.
