UPDATED : அக் 10, 2026 04:29 AM
ADDED : அக் 09, 2026 07:54 PM

- நமது நிருபர் -
ஒரு நாள் மழை, குளிர்; மற்றொரு நாள் காற்று, வெயில் என, வானிலை கண்ணாமூச்சி விளையாடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு சளி, காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி என, பல பிரச்னைகள் ஏற்படும். இதற்கு மருந்து கடைகளில் விற்கும் மாத்திரைகளை விட, இஞ்சி மிட்டாய் சிறப்பான தீர்வை தரும். அதை வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l இஞ்சி - 1 கப்
l வெல்லப்பொடி - 1 கப்
l சர்க்கரை - 1 கப்
l உப்பு - 1 சிட்டிகை
l நீர் - 2 ஸ்பூன்
l நெய் - தட்டில் தடவ தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சியை தோல் நீக்கி, நன்றாக கழுவவும். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போடவும். அதில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்கவும். அதே மிக்சியில் சர்க்கரை, வெல்லப் பொடியை அரைக்கவும்.
அடுப்பில் அடிகனமான வாணலியை வைக்கவும். அதில் மிக்சியில் அரைத்து வைத்துள்ள வெல்லம், சர்க்கரை பொடியை போடவும். மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். அந்த சூட்டில் சர்க்கரை, வெல்லம் கரைந்து நீராகும். இந்த நேரத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு, கை விடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக துவங்கியதும், ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்து அதில் சிறிது வெல்லம், சர்க்கரை கலவையை தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் உருண்டை போன்று இருந்தால், சரியான பதம் வந்துள்ளது என அர்த்தமாகும். உடனடியாக அடுப்பை நிறுத்தவும். அகலமான தட்டில் நெய் தடவி, அதில் கலவையை கொட்டி பரப்பவும்.
சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போதே, சதுர வடிவத்தில் வெட்டவும். நன்றாக ஆறினால் இஞ்சி பர்பி தயார். அதை, காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு கெடாது. தொண்டை வலி, இருமல் வரும்போது், இதை சுவைத்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
