ADDED : மே 02, 2025 11:21 PM

கறிவேப்பிலை சாப்பிட்டால் பல நன்மைகள் உடலுக்கு ஏற்படும். முக்கியமாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஆனால், பலரும் தட்டில் இருந்து முதலில் துாக்கி எறிவது கறிவேப்பிலையே. இதற்கு காரணம் அதன் சுவை பிடிக்காததே. அதனால், முட்டையுடன் சேர்த்து, 'பிரை' செய்து சாப்பிடலாம். அப்போது, அதன் சுவை பெரிதாக தெரியாது. அதே சமயம் நமக்கு சத்தும் கிடைக்கும்.
செய்முறை
முதலில் முட்டைகளை நன்கு வேகவைத்து கொள்ளவும். பின்னர், வேகவைத்த முட்டைகளின் தோலை உரித்து கொள்ளவும். ஒரு வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வறுக்கவும். பிறகு, இதை ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
இதன்பின், பெரிய அளவிலான வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பின், அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கவும். இதில், ஏற்கனவே அரைத்து வைத்த பொடியை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு, சரியான சமயம் பார்த்து, வேக வைத்த முட்டைகளை இரண்டாக கீறி போடவும். பின், ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறவும். அப்போது, நல்ல மணம் வரும். அந்த மணம் தான், டிஷ் தயார் ஆகியது என்ற அறிகுறி. அப்போது, சிறிதும் தாமதமின்றி இறக்கிவிட வேண்டும். கறிவேப்பிலை முட்டை பிரை தயார்.
இந்த பிரையை சாப்பாடுக்கு தொட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சுட சுட சாப்பிடும் போது, சுவை சூப்பராக இருக்கும்.