ADDED : ஜூன் 06, 2026 03:51 AM

- நமது நிருபர் -
உப்புமா என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழிப்போர் அதிகம். ஆனால், மாறுதலாக தயிர் உப்புமா செய்து பாருங்கள். சாப்பாட்டு தட்டு மளமளவென காலியாகும்.
தேவையான பொருட்கள்
l கெட்டித்தயிர் - 1 கப்
l ரவை - 1 கப்
l தண்ணீர் - ஒன்றரை கப்
l எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
l கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
l கடுகு - 1 ஸ்பூன்
l உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
l பச்சை மிளகாய் - 2
l இஞ்சி - சிறிய துண்டு
l கறிவேப்பிலை - 1 கொத்து
l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
l உப்பு - தேவையான அளவு
l நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, ரவையை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு, சில விநாடிகள் வதக்கவும்.
பின், இதில் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்து வைத்துள்ள ரவையை சிறிது, சிறிதாக போட்டு, கட்டிகள் இல்லாமல் கிளறவும். தண்ணீரை, ரவை ஈர்த்து கொண்டதும், அடுப்பை அணைக்கவும். உப்புமா வெதுவெதுப்பான சூட்டுக்கு வந்த பின், தயிரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். இதன் மீது பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை துாவினால், சுவையான தயிர் உப்புமா தயார்.
தேங்காய் சட்னி, ஊறுகாய் போன்றவற்றை தொட்டு சாப்பிட்டால், சுவை அதிகரிக்கும். உப்புமா என்றாலே தலை தெறிக்க ஓடுவோரும், விரும்பி உண்பர். காலை டிபனுக்கு ஏற்றது!
