ADDED : ஜூன் 06, 2026 03:50 AM

- நமது நிருபர் -:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஸ்பெஷல் உணவாக கோங்கூரா சிக்கன் பிரியாணி உள்ளது. இறைச்சியின் காரத்திற்கு புளிச்ச கீரையின் புளிப்பு சுவை சேர்த்து செய்யப்படும் அருமையான உணவாக உள்ளது. இதை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
l பாஸ்மதி அரிசி - அரை கிலோ
l சிக்கன் - ஒரு கிலோ
l கோங்குரா எனும் புளிச்ச கீரை - ஒரு கட்டு
l பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, அன்னாசிபூ, ஜாதிபத்ரி, மராத்தி மொக்கு, கிராம்பு, கல்பாசி
l சோம்பு - ஒரு டீஸ்பூன்
l தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது
l பச்சை மிளகாய் - மூன்று
l தக்காளி - மூன்று
l வெங்காயம் - மூன்று
l நெய், எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
அடுப்பை 'ஆன்' செய்து, வாணலி வைத்து காம்பு கிள்ளிய கீரையை போடவும். அதனுடன் மூன்று பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, ஐந்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து, கீரையை ஆற விட வேண்டும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு 'பேஸ்ட்' போல நன்கு அரைத்து கொள்ளவும்.
மீண்டும் அடுப்பை 'ஆன்' செய்து குக்கர் வைத்து நெய், எண்ணெய், பிரியாணி இலை, அன்னாசி பூ, ஜாதிபத்ரி, மராத்தி மொக்கு, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய மூன்று வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். பின், நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்த்து வதக்கியதும், தண்ணீரில் நன்கு கழுவி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை, மசாலாவுடன் சேர்ந்து 5 நிமிடம் வேக விட வேண்டும்.
இப்போது அரைத்து வைத்த கீரை விழுதை சேர்த்து விடுங்கள். அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து, ஐந்து நிமிடம் வேக விட வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரில் விசிலை போடவும். இரண்டு விசில் அடித்த பின், குக்கர் ஆறியதும் திறந்து, தண்ணீரில் ஊற வைத்திருந்த பாஸ்மதி அரிசியை சேர்த்து, அரிசி உடையாத படி மெதுவாக கிளற வேண்டும். தேவைப்பட்டால் இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளலாம். கொத்தமல்லி இலையை நறுக்கி அதனுடன் சேர்த்து, மீண்டும் குக்கரில் விசில் போட்டு, குறைந்த சூட்டில், 10 நிமிடங்கள் வைத்தால் போதும். இரண்டு விசில் அடித்து ஆறிய பின், குக்கரை திறந்து பார்த்தால் சூடான, சுவையான கோங்கூரா சிக்கன் பிரியாணி தயார். தட்டிற்கு மாற்றி, வெங்காய பச்சடியுடன் சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்!
