ADDED : ஏப் 04, 2026 04:40 AM

- நமது நிருபர் -: பள்ளி, கல்லுாரி சென்று, மாலை வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த ரவா வாழைப்பழ லட்டு செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
பழுத்த வாழைப்பழம் - 1
ஏலக்காய் துாள் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
பால் - ஒன்றரை கப்
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் - ஒரு கப்
செய்முறை
முதலில் ஒரு பெரிய பழுத்த வாழைப்பழத்தின் தோலை உரித்து, சிறிது சிறிதாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
இதை ஒரு பவுலில் போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி, மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து, சில நிமிடம் நன்றாக வதக்குங்கள். பின்னர், சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்க்கவும்.
அதனுடன் ஒரு கப் ரவை சேர்த்து கலக்கவும். ஐந்து நிமிடங்களுக்கு பின், ஒன்றரை கப் பால் சேர்த்து, கெட்டியாகி வரும் வரை நன்றாக கலக்கவும்.
இந்த கலவையுடன் ஒரு கப் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
உருண்டையாக பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். சூடு ஆறியதும் சிறு சிறு லட்டு உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து, உருட்டி வைத்துள்ள சிறிய லட்டு உருண்டைகளை போட்டு, கொஞ்ச நேரத்திற்கு பிரை செய்து எடுத்தால், ரவா வாழைப்பழ லட்டு தயார்.

