ADDED : நவ 29, 2025 05:51 AM

- நமது நிருபர் -: பெரும் புலவர் அவ்வைக்கு நெல்லிக்கனியை பரிசாக தந்தவர் கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் என்பதை படித்திருப்போம். நம் மூதாதையர் அன்றைய காலத்திலே நெல்லிக்கனியின் மருத்துவ குணங்களை உணர்ந்திருந்தனர். இந்த அருமையான கனியை தேனில் ஊற வைத்து, 'தேன் நெல்லிக்காய்' செய்து சாப்பிடலாமா?
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் ... 1 கிலோ
சுத்தமான தேன் ... 1/2 லிட்டர்
செய்முறை
நெல்லிக்காய்களை தண்ணீரில் போட்டு நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். இதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். வேக வைத்த நெல்லிக்காயை வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். சூடு ஆறியதும், நெல்லிக்காயை ஒரு மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். அப்போது, நெல்லிக்காயில் உள்ள ஈரப்பதம் பகுதியளவு வெளியேறும்.
இந்த நெல்லிக்காயை கண்ணாடி பாட்டிலில் போட வேண்டும். இதில் சுத்தமான தேனை ஊற்றவும். பாட்டிலில், நெல்லிக்காயின் அளவை விட தேனின் அளவு அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டிலின் வாய்ப்பகுதியை சுத்தமான வெள்ளை துணியை வைத்து மூடி, காற்று புகாதவாறு கட்டிக் கொள்ள வேண்டும்.
கண்ணாடி பாட்டிலை நாள் முழுதும் வெயிலில் வைக்க வேண்டும். சூரியன் அஸ்தமிக்கும்போது, கண்ணாடி பாட்டிலை வீட்டுக்குள் கொண்டு வந்து விடவும். இப்படியே தொடர்ந்து 15 நாட்கள் செய்து வர வேண்டும்.
இதையடுத்து, நெல்லிக்காயில் உள்ள ஈரப்பதம் அனைத்தும் வெளியேறிவிடும்.
தேனின் அளவும் பாதியாக குறைந்துவிடும். நெல்லிக்காய் நிறமும் மாறி விடும். அவ்வளவு தான், 'தேன் நெல்லிக்காய்' தயார்.
இதை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணாடி பாட்டிலை மூடியால் மூடிக் கொள்ளலாம்.
கையை பயன்படுத்தாமல், ஈரப்பதம் இல்லாத ஸ்பூனை பயன்படுத்தி நெல்லிக்காயை எடுத்து சாப்பிட வேண்டும்.
இந்த தேன் நெல்லியை தினமும் ஒன்று சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். இந்த முறையில் எவ்வித ரசாயனமோ, சர்க்கரையோ சேர்க்கவில்லை. இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும். இது, பாரம்பரியமான முறைகளில் ஒன்றாகும்.

