ADDED : செப் 12, 2026 04:28 AM

- நமது நிருபர் -
தென் மாநிலங்களில் இளநீர் பாயாசம், தேங்காய் பால் பாயாசம் பரவலாக அறியப்பட்டாலும், தேங்காய் பூவை வைத்து செய்யப்படும் பாயசம் கிராமத்து சமையல்களில் முதன்மை பெற்றுள்ளது. இந்த பாயசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் பூ - 1 கப்
கெட்டியான பால் ஒரு கப்
தேங்காய் பால் - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
முந்திரி பருப்பு - 10
உலர் திராட்சை - 10
ஏலக்காய் துாள் - கால் டீஸ்பூன்
சுக்கு துாள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பை ஆன் செய்து, கனமான பாத்திரம் வைத்து வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளுங்கள்.
இன்னொரு பாத்திரம் அல்லது கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் நறுக்கிய தேங்காய் பூ சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். பச்சை வாசனை நீங்கி பாயாசத்திற்கு தேவையான மணத்தை வந்ததும், தேங்காய் பால் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும். தேங்காய் பூ நன்கு வெந்து மென்மையாகும் வரை 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
தேங்காய் பூ வெந்ததும், வெல்ல கரைசலை ஊற்றி நன்கு கிளறவும். வெல்லமும், தேங்காய் பூவும் சேர்ந்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடலாம். பின், கெட்டியான தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். லேசான நுரை வரும் போது அடுப்பை ஆப் செய்து விடலாம். ஏலக்காய் துாள், சுக்கு துாள் துாவி கிளறவும்.
மற்றொரு சிறிய தாளிப்பு கரண்டியில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான, மணம் மிக்க, ஆரோக்கியமான தேங்காய் பூ பாயசம் ரெடி!
