ADDED : ஜூன் 20, 2025 11:20 PM

இது மாம்பழ சீசன். பலருக்கும் மாம்பழம் என்றால் உயிர். உணவு, சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுவர். மாம்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கும் இனிப்புகளில், மாம்பழ ரசகுல்லாவும் ஒன்றாகும். இதை எப்படி செய்வது என பார்ப்போமா?
செய்முறை
முதலில் தோலை நீக்கிய மாம்பழத்தை, பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். இதில் அரை லிட்டர் பால் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். மிச்சமுள்ள அரை லிட்டர் பாலை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். இதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழம் சாற்றை பிழிந்து ஊற்றவும். பால் திரியும். அதை நீர் இல்லாமல் கெட்டியாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
இதை மிக்சியில் போட்டு, நைசாக அரைக்கவும். பின், சிறு, சிறு உருண்டைகளாக்கி தனியாக வைக்கவும். அதன்பின் பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை முழுமையாக கரைய வேண்டும். சர்க்கரை பாகு தயாராகும் வரை கொதிக்க விடவும்.
ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பால் உருண்டைகளை, சர்க்கரை பாகில் போட்டு மூடி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இதில் ஏடு இல்லாத பால் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். ஏலக்காய் துாள் சேர்க்கவும்.
அதன்பின் இந்த கலவையில், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மாம்பழம் கூழ், பால் கலவையை சேர்க்கவும். இதில் நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி பருப்பை துாவி, பிரிஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழிந்தால் சுவையான மாம்பழ ரசகுல்லா தயார்
- நமது நிருபர் -.