ADDED : ஜூலை 18, 2026 12:07 AM

- நமது நிருபர் -
மாலை நேரத்தில் சூடான காபி அல்லது டீயுடன் நொறுக்கு தீனி தின்பது பலரின் பழக்கம். கடைகளில் விற்கப்படும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை வாங்குவதை விட, வீட்டிலேயே ஆரோக்கியமான தின்பண்டங்களை செய்து சாப்பிடலாம். அந்த வகையில், பாலக் முறுக்கும் எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l அரிசி மாவு - 2 கப்
l பொட்டுக்
கடலை மாவு - கால் கப்
l பாலக்கீரை - 1 கப் சுத்தம் செய்து நறுக்கியது
l பச்சை மிளகாய் - 2
l வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
l சீரகம் அல்லது ஓமம் - 1 ஸ்பூன்
l பெருங்காய துாள் - அரை ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
l எண்ணெய் - முறுக்கு பொறிக்க தேவையான அளவு
l வெள்ளை எள் - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் பாலக்கீரையை இரண்டு நிமிடம் போட்டு வேக வைக்கவும். அதன்பின் பச்சை மிளகாயுடன், கீரையை போட்டு நைசாக அரைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகம், பெருங்காய துாள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் வெண்ணெய், அரைத்த கீரை விழுதை சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி பதத்தில் பிசையவும். முறுக்கு அச்சில் மாவை கரண்டியின் பின்புறமோ அல்லது பட்டர் பேப்பரிலோ, முறுக்குகளை வட்டமாக பிழிந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் ஏற்கனவே பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், மொறுமொறு பாலக் முறுக்கு தயார். பல நாட்கள் கெடாது. பாலக்கீரை சேர்ப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்!
