ADDED : ஆக 09, 2025 04:58 AM

தேங்காய் துருவல் போட்டு தயாரிக்கும் சமையலை விட, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கும் உணவு மிகவும் சுவையாக இருக்கும். கிரேவி, பட்டர் சிக்கன், புலாவ் உட்பட அனைத்து உணவுக்கும் தேங்காய் பால் சேர்த்து சமைத்தால், அதன் சுவையே தனிதான். கோக்கநட் மில்க் ரைசும் அதில் ஒன்றாகும்.
செய்முறை முதலில் அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் நன்றாக ஊற வையுங்கள். கேரட், பீன்ஸ், பச்சை மிளகாயை சிறிதாக வெட்டி கொள்ளுங்கள். தேங்காயை சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். சூடானதும் முந்திரிப்பருப்பை போடவும். பொன்னிறமானதும் எடுத்து தனியாக வைக்கவும். அதே குக்கரில் பிரிஞ்சி இலையை போடவும். நான்கைந்து ஏலக்காய், லவங்கம், சிறிதளவு பட்டை, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது போடவும். இரண்டு நிமிடம் கிளறவும்.
அதன்பின் பட்டாணி, கேரட், பீன்ஸ் போட்டு மீண்டும் கிளறவும். இந்த கலவையில் தேங்காய் பால், இரண்டு கப் தண்ணீர், சுவைக்கு தேவையான உப்பு சேர்க்கவும். கலவை கொதிக்க துவங்கியதும், அதில் ஏற்கனவே ஊற வைத்துள்ள அரிசியை போடவும். அதன்பின் குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை வைத்திருந்தால், சுவையான கோக்கநட் மில்க் ரைஸ் தயார். குக்கரை திறந்து முந்திரி பருப்பை துாவி பரிமாறவும்.
இது தென்னகம் மற்றும் கடலோர பகுதிகளில் பிரபலமான உணவாகும். - நமது நிருபர் -