மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் 'பலாக்காய் - 65'
மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் 'பலாக்காய் - 65'
ADDED : செப் 13, 2025 04:45 AM

மாலை வேளையில் பஜ்ஜி, பக்கோடா போன்ற ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு முறை பலாக்காய் - 65 செய்து சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவையில் நிச்சயம் மெய் மறந்து போவீர். சில உணவுகள் ஹோட்டல்களில் கிடைக்காது. வீட்டில் மட்டுமே செய்து ருசிக்க முடியும். அவ்வகை உணவுகளில் ஒன்று தான் இந்த 'பலாக்காய் - 65'.
செய்முறை முதலில் சிறிய அளவிலான பலாக்காய் தோலை கத்தியால் சீவி எடுக்க வேண்டும். காயின் நடுவில் உள்ள தண்டு பகுதியை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அதை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. பின், கையில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு, பலாக்காயை சதுர வடிவில் சிறிது, சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதில், வெட்டிய பலாக்காய் துண்டுகளை போட்டு மஞ்சள் துாள், மிளகாய் துாள் ஆகியவற்றை போட்டு வேக வைக்க வேண்டும்.
பலாக்காய் துண்டுகள் நன்கு வெந்ததும், அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மக்கா சோளம் மாவு, பச்சரிசி மாவு, கறி மசாலா, கார மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ள வேண்டும்.
இதில், பலாக்காய் துண்டுகளை போட்டு பிரட்டி எடுக்கவும். பின், பலாக்காய் துண்டுகளை ஒரு வாணலியில் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சூடான பலாக்காய் - 65 தயார்.
இதை மாலை வேளைகளில் செய்து சாப்பிட்டால் சுகமாக இருக்கும்; பொழுது போவதே தெரியாது.
- நமது நிருபர் -