ADDED : மார் 28, 2026 04:13 AM

- நமது நிருபர் -
அசைவ உணவு பிரியர்களுக்கு, ஹோட்டலில் சமைக்கப்படும் அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அசைவ உணவில் உள்ள பல டிஷ்களை விரும்பி சாப்பிடுவர். வீடுகளிலும் மட்டன், சிக்கன், மீன் எடுத்து சாப்பிடுகின்றனர். வீட்டில் சிக்கனை வைத்து சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என்று திரும்ப, திரும்ப செய்து போர் அடித்து விட்டதா. சற்று மாறுதலாக ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா. அப்படி என்றால் முகலாய் சிக்கன் ஹண்டி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ சிக்கன்
ஒரு டீஸ்பூன் மிளகு துாள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் துாள்
இரண்டு டீஸ்பூன் தனியா துாள்
ஒரு டீஸ்பூன் சீரக துாள்
அரை டீஸ்பூன் மஞ்சள் துாள்
ஒரு கப் தயிர்
கடலை எண்ணெய் தேவையான அளவு
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
அரை கப் தக்காளி விழுது
முந்திரி பருப்பு 20
ஒரு கப் காய்ச்சிய பால்
ஒரு டீஸ்பூன் கரம் மசாலா துாள்
கஸ்துாரி மேத்தி சிறிதளவு
செய்முறை
மிக்ஸி ஜாரில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். சிக்கனை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய், மஞ்சள், மிளகு, மல்லி, சீரக துாள்களை போட்டு, அதனுடன் தயிரும் சேர்ந்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை நீங்கியதும் சிக்கன் கலவையை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அரைத்த தக்காளி விழுது, மிக்ஸியில் அரைத்த பால், முந்திரி பருப்பு விழுது சேர்த்து வாணலியை மூடி வைத்து விடவும். சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது, கரம் மசாலா துாள், கஸ்துாரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான முகலாய் சிக்கன் ஹண்டி தயார்.
சப்பாத்தி, பூரி, நான் ஆகிய உணவுகளுக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
