ADDED : ஏப் 19, 2025 11:03 PM

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் லைலா கிராமத்தை சேர்ந்தவர்கள் சேகர் ஷெட்டி, சாரதா தம்பி. இவர்களின் மகள் ஷ்ரத்தா ஷெட்டி. எஸ்.டி.எம்., கல்லுாரியில் இறுதி ஆண்டு பி.எஸ்.சி., படித்து வருகிறார்.
கலை ஆர்வம்
சிறு வயதில் இருந்தே கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். பல ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் வரைந்த ஓவியங்களை, பலரும் விரும்பி வாங்கிச் சென்றுள்ளனர்.
இதுபோன்று கோலம் போடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த கோலப் போட்டியில், முதல் பரிசு பெற்றார். பல்வேறு விதமான கோலம் வரைந்து கற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து, பூக்களால் கோலம் வரைவதில் ஆர்வமானார். அதில் தேர்ச்சியும் பெற்றார். இதில் சாதனை படைக்க விரும்பினார்.
ஒரு மணி 39 நிமிடம்
நடப்பாண்டு பிப்., 9ம் தேதி காலையில், ௮ அடி சுற்றளவில் பூக்களால் கோலம் வரைய துவங்கினார். இதற்காக சிவப்பு ரோஜா, மல்லிகை, மஞ்சள் சாமந்தி, துளசி ஆகியவற்றை பயன்படுத்தினார். ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் பூக்கோலத்தை முடித்தார். இதன் வீடியோவை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பினார். ஆய்வு செய்த அதிகாரிகள், அவரின் சாதனையை ஏற்றுக் கொண்டனர். கடந்த 4ம் தேதி, பதக்கம், சான்றிதழை வழங்கினர்.
இதுகுறித்து ஷ்ரத்தா கூறியதாவது:
கிராமத்தில் அனைவரும் கோலம் போடுகின்றனர். ஆனால், தானியங்கள், பூக்களால் கோலம் போடுவது அரிது. ௮ அடி சுற்றளவில் குறுகிய நேரத்தில் பூக்கோலம் போட வேண்டும் என்று தீர்மானித்தேன்.
இதற்காக கோவில்களில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் உள்ள பூக்களை பயன்படுத்த முடிவு செய்தேன். இதற்காக என் தந்தை பெரிதும் உதவினார். பல்வேறு கோவில் நிர்வாகிகளிடம் என் ஆர்வம் குறித்து விளக்கினார்.
சாதனை
இதை ஏற்றுக் கொண்ட கோவில் நிர்வாகத்தினரும், சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை தர சம்மதம் தெரிவித்தனர். கோலம் வரைய, பிப்., 9ம் தேதி நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள், கோவில்களுக்கு சென்று மாலை வாங்கி வரப்பட்டது. கோர்க்கப்பட்ட பூக்களை, நான் உட்பட என் பெற்றோர், சகோதரிகள் சேர்ந்து தனித்தனியாக பிரித்தோம். மறுநாள் காலை பூக்கோலம் போட்டேன்.
இதில் உலக சாதனை செய்ய திட்டமிட்டு உள்ளேன். இதற்காக என்னை தயார்படுத்திக் கொள்வேன். ஆசிரியை ஆக வேண்டும் என்பது என் கனவு. ஓவிய ஆசிரியை அல்லது எனக்கு பிடித்த பாடத்தில் ஆசிரியையாக பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

