/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
புகையிலை பொருட்கள் இல்லாத கிராமமாக மாறிய படுபெராரே
/
புகையிலை பொருட்கள் இல்லாத கிராமமாக மாறிய படுபெராரே
புகையிலை பொருட்கள் இல்லாத கிராமமாக மாறிய படுபெராரே
புகையிலை பொருட்கள் இல்லாத கிராமமாக மாறிய படுபெராரே
ADDED : பிப் 01, 2026 05:07 AM

தட்சிண கன்னடா மாவட்டத்தின், படுபெராரே கிராமம், முன் மாதிரி கிராமமாக மாறியுள்ளது. அதாவது, புகையிலை பொருட்கள் இல்லாத கிராமம் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பீடி, சிகரெட், பான் பராக் உட்பட பல விதமான புகையிலை பொருட்களால், இளம் தலைமுறையினரின் எதிர்காலம் பாழாகிறது. இத்தகைய பொருட்களின் பயன்பாட்டால், பலருக்கு புற்றுநோய் பாதிப்பும் ஏற்படுகிறது.
புகையிலை பொருட்களில் இருந்து விலகி இருங்கள் என, சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. சில கிராமங்களில் புகையிலை பொருட்களை ஒழிக்க, மக்களே ஆர்வம் காட்டுகின்றனர். இந்த முயற்சியில் படுபெராரே கிராமம் வெற்றி பெற்றுள்ளது. இந்த கிராமத்தை, 'புகையிலை பொருட்கள் இல்லாத கிராமம்' என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட புகையிலை கட்டுப்பாடு அதிகாரியான டாக்டர் நவீன் கூறியதாவது:
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரில் உள்ளது படுபெராரே கிராமம். இங்கு, 2,225 குடும்பங்கள் உள்ளன.
கிராமத்தில், 12 கடைகள் உள்ளன. இதற்கு முன் இந்த கடைகளில் பீடி, சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டன.
இவற்றை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். நானும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று, புகையிலை பொருட்கைள விற்கக்கூடாது என, அறிவுறுத்தினோம் .
வீடு வீடாக சென்று, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, அதன் விளைவாக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை விவரித்தோம்.
பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுடன் ஆலோசனை நடத்தி திட்டம் வகுத்தோம். பஞ்சாயத்து குழுவினருடன், அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதன்பின், கடைகளில் புகையிலை பொருட்களின் விற்பனை, படிப்படியாக குறைந்து, இப்போது முழுதாக நின்றுள்ளது. ஓராண்டாக எங்களின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.
படுபெராரே கிராமத்தை, புகையிலை பொருட்கள் இல்லாத கிராமம் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேபோன்று, கர்நாடகாவின், 150க்கும் மேற்பட்ட கிராமங்கள், புகையிலை இல்லாத கிராமங்களாக மாறி வருகின்றன. இது, மகிழ்ச்சியான விஷயமாகும்.
இவ்வாறு நவீன் கூறினார்
- நமது நிருபர் - .

