UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 08:38 PM

- நமது நிருபர் -: 'அதிக முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும்' என்ற வாசகத்தை பொய்யாக்கும் விதமாக வாழ்பவர் விவசாயி மாயப்பா மகதுமா, 45. இவர், பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஹல்யால் கிராமத்தை சேர்ந்தவர். இவர், பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்கிறார். விவசாயத்துடன் வேறு ஏதாவது ஒரு தொழிலை துவங்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தார். இதன் விளைவாக, 2016ல் ஆடு வளர்க்க முடிவு செய்தார்.
இதற்காக, தனது விவசாய நிலத்தில், 600 சதுர அடியில், 1.20 லட்சம் ரூபாய் செலவில், கொட்டகை அமைத்தார். 50,000 ரூபாய்க்கு ஆடுகளை வாங்கினார். இத்துடன் நாட்டு கோழிகளையும் வாங்கினார். தனது தோட்டத்தில் உள்ள இலைகளை வெட்டி வந்து ஆடுகளுக்கு உணவாக தருவார்.
ஆடுகளின் உடலில் உள்ள பூச்சி, வண்டுகளை தின்று, கோழிகள் சுத்தம் செய்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். இதனால், மேலும் நிறைய கோழிகளை வாங்கினார். இதனால், ஆடுகள் பூச்சி, வண்டுகளால் ஏற்படும் நோய் அபாயங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டன.
இவர், தனது பண்ணையில் உள்ள ஆடுகளை விற்கவும் துவங்கினார். ஒரு குட்டி ஆடு வளர துவங்கியதை அடுத்து, 15 மாதங்கள் நிறைவடைந்தவுடன், அதை சந்தையில் கொண்டு விற்பார். 5,000 ரூபாய்க்கு வாங்கிய குட்டி ஆடு, சந்தையில் 50,000 ரூபாய் முதல், 60,000 ரூபாய்க்கு விற்பனையாகும். விவசாயத்தில் மழையின்மையால் லாபம் கிடைக்காத சமயத்தில், தன்னிடமுள்ள ஆடுகளை விற்று விடுவார்.
தற்போது, இவரது கொட்டகையில், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன. கோழி முட்டையை சந்தையில் விற்றும் பணம் சம்பாதிக்கிறார். சிலர், இவரது பண்ணைக்கு நேரடியாக வந்து கோழி முட்டைகள், ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
தற்போது, இவர் ஆடு வளர்ப்பின் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ''புதிதாக தொழில் துவங்க நினைத்தால் கையில் இருப்பதை வைத்தே துவங்குங்கள். பெரிய முதலீட்டுக்காக தொழிலை துவங்க காலத்தை தாமதிக்காதீர்கள். இதுவே நான் என் வாழ்வில் கற்றுக்கொண்ட பாடம். ஆடு வளர்ப்பின் மூலம் கடந்த, 10 ஆண்டுகளில், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து உள்ளேன்,'' என்றார்.
