/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட் செய்யும் தலைமை ஆசிரியர்
/
மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட் செய்யும் தலைமை ஆசிரியர்
மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட் செய்யும் தலைமை ஆசிரியர்
மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட் செய்யும் தலைமை ஆசிரியர்
UPDATED : மார் 23, 2025 09:22 AM
ADDED : மார் 22, 2025 08:44 PM

இன்றைய காலத்தில் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் நல்ல முறையில் பாடம் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதே, பெரிய விஷயமாக உள்ளது. பெயரளவில் பணியாற்றுவோரே அதிகம்.
ஆனால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு, தன் சொந்த பணத்தில், 1,000 ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்கிறார்.
அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே, பெற்றோர் அதிகம் விரும்புகின்றனர். அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது; அடிப்படை வசதிகள் இருக்காது. ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்தமாட்டார்கள் என, பலரும் கருதுகின்றனர். இதனால், கடன் வாங்கியாவது, பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ஆசிரியர் தொழிலை சேவையாக நினைக்கும் ஆசிரியர்களும் உள்ளனர். இதற்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சித்தமல்லா கோத்தா சிறந்த எடுத்துக்காட்டு.
ஈர்க்க முயற்சி
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் அடஹள்ளட்டி கிராமத்தில் துவக்கப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் சித்தமல்லா கோத்தா, தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இவர் தன் பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கிறார். பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவரின் பெயரில், தன் சொந்த பணத்தில் 1,000 ரூபாயை, மாணவர் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்கிறார்.
நடப்பாண்டு ஒன்பது மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களின் பெயரில் வங்கியில் 1,000 ரூபாய் டிபாசிட் செய்துள்ளார்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள, இந்த துவக்க பள்ளி 2005ல் திறக்கப்பட்டது. 2015 வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை 60 முதல் 70 மாணவர்கள் இருந்தனர். ஆனால் ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடந்தாண்டு வெறும் 18 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
கடந்த 2023ல் சித்தமல்ல கோத்தா, இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். கிராமத்தின் துவக்க, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக, வினாடி - வினா போட்டிகள் ஏற்பாடு செய்து, தன் சொந்த செலவில் பரிசு வழங்குகிறார்.
முன் மாதிரி
கோடை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார். நன்கொடையாளர்களின் உதவி பெற்று, பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்தே, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார். அரசு பள்ளிக்காக இவர் செய்யும் சேவை, மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது.
தலைமை ஆசிரியர் சித்தமல்ல கோத்தா கூறியதாவது:
கடந்தாண்டு எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள் இருந்தனர். நடப்பாண்டு ஒன்பதாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவர்களின் பெயரில் வங்கியில் 1,000 ரூபாய் டிபாசிட் செய்வது, என் சிறிய முயற்சி.
பள்ளிக்கு கிடைக்கும் நிதியுதவியை பயன்படுத்தியும், நன்கொடையாளர்களிடம் உதவி பெற்றும், அடிப்படை வசதிகளை செய்கிறோம். இதன் பயனாக, ஒன்றாம் வகுப்பு மட்டுமின்றி மற்ற வகுப்புகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
எங்களின் முயற்சிக்கு நடுவிலும், பள்ளியில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது பள்ளி வளாக தடுப்பு சுவர், கழிப்பறை கட்ட வேண்டும். குடிநீர் பில்டர், கல்விக்கு தேவையான அதிநவீன பொருட்கள் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.