/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பெங்களூரு தம்பதி உருவாக்கிய 'சமோசா ராஜ்ஜியம்'
/
பெங்களூரு தம்பதி உருவாக்கிய 'சமோசா ராஜ்ஜியம்'
ADDED : மார் 15, 2025 11:39 PM

சிறந்த பணியை விடுத்து, பல இன்னல்களை சந்தித்து, பெங்களூரு மட்டுமின்றி, பல மாநிலங்களில் 'சமோசா' சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி உள்ளனர், பெங்களூரு 'சிங்' தம்பதி.
வழக்கமாக டீக்கடைக்கு சென்றால், நாம் டீ மட்டும் குடிக்க மாட்டோம். வடை, பஜ்ஜி, குறிப்பாக சமோசா சாப்பிடாமல் திரும்புவதில்லை. காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் டீ கடைகளில் டீக்கு அடுத்தபடியாக, சமோசாவுக்கு தான் கிராக்கி.
* ராஜினாமா
தங்களின் கனவை நிறைவேற்ற, சமோசாவை ஒரு சாதனமாக பெங்களூரு தம்பதி அமைத்துக் கொண்டனர். ஆம், பெங்களூரை சேர்ந்தவர்கள் சிகர் வீர் சிங் - நிதி சிங். தம்பதியான சிகர் வீர் சிங், பயோடெக்னாலஜி நிறுவனத்திலும்; நிதி சிங், பன்னாட்டு நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வந்தனர்.
ஒருநாள் உணவு இடைவேளையின்போது, அலுவலகத்தில் வெளியே வந்த சிகர் வீர் சிங், ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.பி.ஐ., வங்கி அருகில் டீக்கடையில் சமோசா குவித்து வைக்கப்பட்டிருந்தது. டீ குடித்துக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர், சமோசாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த சிகர் வீர் சிங், இது போன்று சமோசா தொழில் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தார். அன்று மாலையில், தன் மனைவி நிதி சிங்கிடம், 'நம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்; என் பணியை ராஜினாமா செய்கிறேன்' என்று கூறினார்.
* திட்டமிடல்
இதுகுறித்து தம்பதி கூறியதாவது:
பணியை ராஜினாமா செய்கிறேன் என்று என் கணவர் கூறியதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரி என்று கூறிவிட்டேன். அன்றிரவு இருவரும் பேசினோம். இருவரும் கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தோம். இருந்தாலும் கணவரின் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடவில்லை. முதலில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.
அதன்படி, 2015ல், அவர் பணியை ராஜினாமா செய்தார். ஓராண்டாக, நகரில் எத்தகைய சமோசாக்கள் விற்பனையாகின்றன என்பது உட்பட பல தகவல்களை சேகரித்தார். ஓராண்டுக்கு பின், நான் வேலையை ராஜினாமா செய்தேன்.
இந்த கால கட்டத்தில், ஹைதராபாத் சமோசா, பஞ்சாப் சமோசா என விற்பனையாவதை கவனித்தோம். ஆனால், அது போன்று தயாரிக்க நாங்கள் விருப்பமில்லை.
300 சதுர அடி சமையல் அறை
எனவே, 300 சதுர அடி சமையல் அறையில், ஒரு 'செப்'புடன் 2016ல் 'சமோசா சிங்', என்ற பெயரில் கடை ஆரம்பித்தோம். தினமும், என் கணவர் நகரில் ஆர்டர் கொடுத்த கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்; நான் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டேன்.
மக்களை, எங்கள் பக்கம் ஈர்க்க திட்டமிட்டோம். பீட்சா, பர்கர் கடைகள் போன்று 'சமோசா'வுக்கும் ஒரு 'பிராண்ட்' உருவாக்க முடிவு செய்தோம். பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் இருந்த எலக்ட்ரானிக் சிட்டியில், எங்களின் முதல் கடையை திறந்தோம்.
* மாவில் அறிவியல்
கடையில் சூடான சமோசாவை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்குள் சூடு ஆறி போய் இருக்கும். இதையே நாங்கள் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தோம். கடைக்கு வருவோர், ஆர்டர் கொடுத்த பின்னரே, சமோசாவை தயாரித்து கொடுக்க முடிவு செய்தோம். இந்த திட்டம் 'சக்ஸஸ்' ஆனது.
மற்றொரு வழிமுறையையும் கண்டுபிடித்தோம். சமோசா நீண்ட நேரம் மொறு, மொறுப்பாக இருப்பதற்காக, உருளை கிழங்கு மசாலாவை மாவினுள் வைத்த பின், அதன் மீது லேசாக மசாலாவை தடவ வேண்டும். எண்ணெயில் பொரித்த பின், மொறு மொறுவென இருப்பதை உறுதி செய்தோம். இவ்வாறு செய்யும் போது நீண்ட நேரம் சூடாக இருக்கும்.
உணவு தயாரிப்பது என்பது அறிவியல். சமையல் அறையில் அதை பயன்படுத்துகிறோம். எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம்; இன்று அது பலனை அளிக்கிறது.
குறிப்பாக சமோசாக்களில் அதிக எண்ணெய் உறிஞ்சாதவாறு உறுதி செய்கிறோம். ஆர்டர்கள் அதிகரிக்க, அதிகரிக்க, செப்கள், ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தோம். தற்போது எங்களின் சமோசா, பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, தமிழகத்தின் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உட்பட எட்டு நகரங்களில் எங்களின் 'சமோசா சிங்' கடையை திறந்துள்ளோம். ஒவ்வொரு நாளும் 50,000 சமோசாக்கள் விற்பனையாகின்றன.
உருளைகிழங்கு, வெஜ்ஸ்பைஸ், மஞ்சூரியன், சீஸ் சில்லி சமோசாக்கள் சக்கை போடு போடுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்
- நமது நிருபர் -.