/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பாலி யல் தொழிலில் இருந்து மீண்டு ஓவிய கலைஞரான திருநங்கை
/
பாலி யல் தொழிலில் இருந்து மீண்டு ஓவிய கலைஞரான திருநங்கை
பாலி யல் தொழிலில் இருந்து மீண்டு ஓவிய கலைஞரான திருநங்கை
பாலி யல் தொழிலில் இருந்து மீண்டு ஓவிய கலைஞரான திருநங்கை
ADDED : ஜூலை 06, 2025 06:07 AM

திருநங்கையருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத போது, பாலியல் தொழிலாளியாக இருந்தவர், பின் ஓவிய கலைஞராக மாறி, சமூகத்தினராலும், குடும்பத்தினராலும் மதிக்கப்படும் அளவுக்கு உயர்ந்த திருநங்கையின் கதை தான் இது.
பெங்களூரை சேர்ந்தவர் சங்கர். தான் எப்படி 'சாந்தி முனுசாமி' எனும் திருநங்கையானேன் என்பதை அவரே கூறியதாவது:
சிறு வயதில், என தாயார் வீட்டின் முன், காலையில் கோலம் போட்டு, அதற்கு வண்ணம் தீட்டுவார். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். நானும் கோலம் போட முயற்சித்தபோது, என் கையை தட்டி விட்ட தாயார், இது பெண்களின் வேலை; உன் வேலையல்ல என்று திட்டுவார்.
தங்கை உடை
எனக்கு புதிய பேன்ட், சர்ட்; என் தங்கைக்கு தாவணி வாங்கி கொடுப்பர். எனக்கு பேன்ட், சர்ட்டை விட, தாவணி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், என் தங்கையின் உடையை அணிந்து, கண்ணாடியில் பார்த்து மகிழ்வேன்.
பள்ளியில் மாணவர்களுடன் கிரிக்கெட், புட்பால் விளையாடுவதை விட, மாணவியருடன் 'பார்பி கேர்ள்' விளையாடுவது பிடிக்கும். இதற்கு பள்ளியிலும், வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மருந்தக கடையில் பணியாற்றி வந்தேன். என் மனதில் இருக்கும் வலியை கேட்க யாரும் இல்லை. இதை நினைத்து யாரும் இல்லாத நேரத்தில் தேம்பி அழுதுள்ளேன்.
ஒரு நாள் அவ்வழியாக வந்த திருநங்கை, என்னை பார்த்து 'எப்படி இருக்கிறாய் பெண்ணே' என்று கேட்டார். பேன்ட், சர்ட்டில் இருக்கும் என்னை பார்த்து, என் மனதில் இருப்பதை உணர்ந்து 'பெண்ணே' என்று என்னை அழைத்தது மகிழ்ச்சி அளித்தது.
தாய் வேதனை
சில ஆண்டுகளுக்கு பின், நான் யார்; எனக்குள் ஏற்பட்ட மாற்றம் குறித்து தாயாரிடம் கூறினேன். நான், 'ஆண் பிள்ளையை தானே பெற்றேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது' என்று வேதனை அடைந்தார்.
என்னுடை 21வயதில் வீட்டை விட்டு வெளியேறி, என் சமுதாய மக்களுடன் இணைந்து, பாலியல் தொழிலாளியானேன். சில ஆண்டுகள் இத்தொழிலில் இருந்த எனக்கு, பெங்களூரை சேர்ந்த ஆராய்ச்சி மையம் சார்பில் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இதையடுத்து, திருநங்கைகள் நடத்தும் 'ரேடியோ'வில் 'ரேடியோ ஜாக்கி'யாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ரேடியோ குறித்து எதுவும் தெரியாத எனக்கு, ஒரே வாரத்தில் ரிக்கார்டிங், எடிட்டிங் உட்பட பல விஷயங்களை கற்றக் கொண்டேன். இதன் மூலம் எனக்கான அடையாளம் கிடைத்தது.
மூன்று ஆண்டுகள் பணியாற்றிய நான், பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். இது எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து ரேடியோவில் பணியாற்ற முடியாத சூழல் உருவானது.
அரவாணி கலை திட்டம்
திருநங்கையரை ஒன்றிணைத்து, வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாக மாற்றும், 'அரவாணி கலை திட்டம்' என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ள திருநங்கையர் மூலம், சுவர் ஓவியம் வரையப்படுகிறது. இதில் இணையும் படி, 2015 ல் எனக்கு அழைப்பு வந்தது.
அப்போது, அறுவை சிகிச்சை மூலம், ரத்த கசிவும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும், இந்த அமைப்பில் சேர்ந்தேன். ஓவியம் வரைய ஏணியில் ஏற வேண்டும் என்பதால், கூடுதலாக 'நாப்கின்' வாங்கி வைத்து கொண்டேன். ஓவியம் வரைய துவங்கிய போது, வலி குறைவதை உணர்ந்தேன். இது என் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, மன நிம்மதியையும் அளித்தது.
அத்துடன் இன்று என் குடும்பத்தினர் என்னை புரிந்து கொண்டனர். தீபாவளி அன்று, என் தாயார் எனக்கு பெண்கள் அணியும் ஆடை வாங்கி கொடுத்தது மறக்க முடியாத நாளாகும். அன்று ஆடையை கொடுத்தது மட்டுமின்றி, அதை அணியவும் வைத்தார். அத்துடன் சில 'மேக்அப் டிப்ஸ்' வழங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.