UPDATED : மே 12, 2023 12:45 PM
ADDED : மே 12, 2023 12:44 PM

நம் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின்போது தவறாமல் இடம்பிடிக்கும் இனிப்புப் பொருள் என்றால் அது பால் கொழுக்கட்டைதான். இதை செய்வது கடினம் என நினைத்து பலர் இதனைத் தவிர்க்கின்றனர். சுலபமான வழிமுறையைப் பின்பற்றினால் இதை ஒரு மணி நேரத்துக்குள் எளிதில் செய்து முடித்துவிடலாம். எப்படி எனப் பார்ப்போம் வாங்க...
அரை கப் கொழுக்கட்டை மாவு, ஒரு தேக்கரண்டி நெய், வெந்நீர், 200 கிராம் வெல்லம், ஒரு டம்ளர் பால், ஏலக்காய் தூள், ஒரு தேக்கரண்டி தேங்காய் பால் ஆகியவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். பால் கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு சுத்தமான கிண்ணத்தில் கொழுக்கட்டை மாவு அரை கப், ஒரு ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு மற்றும் சூடான தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இவ்வாறு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒன்றரை கப் பால் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். பால் நன்றாகக் கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அவற்றில் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும்.
பதினைந்து நிமிடங்கள் வேகவைத்த பின்னர் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒன்றரை கப் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாகக் கொதிக்கவிடவும். இப்போது இந்த கொழுக்கட்டைக்கு வெல்லப் பாகு செய்யவேண்டும். எனவே அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 200 கிராம் வெல்லம் சேர்த்து, வெல்லம் கரையும்வரை நன்கு கொதிக்கவிடவும்.
![]() |
வெல்லம் கரைந்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப் பாகை வேகவைத்துள்ள பால் கொழுக்கட்டையில் ஊற்றி ஒருமுறை நன்றாகக் கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான, சுவையான பால் கொழுக்கட்டை தயார். கொழுக்கட்டையில் வெல்லம் ஊற ஊற அதன் சுவை கூடும். எனவே சில மணிநேரம் கழித்து சாப்பிடுவது நல்லது.

