
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. அப்புறம் என்ன ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் தான். புது உடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அடுத்த வாரம் இந்நேரம் தீபாவளியை நிறைவு செய்திருப்போம்.
பொதுவாக வீடுகளில் தீபாவளி அன்று பஜ்ஜி, வடை, முறுக்கு, அதிரசம், ரவா லட்டு, குலோப் ஜாமுன் செய்து இல்லத்தரசிகள் அசத்துவர். தீபாவளிக்கு வீட்டில் செய்யும் ஸ்வீட்டாக பாசி பருப்பு லட்டு உள்ளது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதனுடன் 200 கிராம் பாசி பருப்பை போட்டு, அடுப்பில் வைத்து வறுக்க வேண்டும். பாசி பருப்பு லேசாக நிறம் மாறும்போது அடுப்பை 'ஆப்' செய்யவும். சூடு ஆறியதும், பாசி பருப்பை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். ரொம்ப பவுடராக அரைத்து விடக்கூடாது.
பின், ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்து இருந்த பாசி பருப்பு பவுடரை போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் இறுகி, பருப்பு கெட்டியான பின், மூன்று கப் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் இறுகியதும் அடுப்பை ஆப் செய்துவிடவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நான்கு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதனுடன் முந்திரி சேர்த்து நன்கு வதக்கி, கெட்டியாக இருக்கும் பாசி பருப்புடன் சேர்க்க வேண்டும். அதன்பின், கையில் நெய் அல்லது எண்ணெய் தடவி, லட்டு பிடிக்க ஆரம்பிக்கலாம். எண்ணெய் பயன்படுத்தாமல் சுவையான பாசி பருப்பு லட்டு தயார்.