UPDATED : ஜூன் 11, 2026 08:01 AM
ADDED : ஜூன் 07, 2026 09:26 AM

தேவையான பொருட்கள்
மட்டன் சுவரொட்டி - 1/4 கிலோ
நல்லெண்ணெய் - 75 மி.லி.,
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 5
லவங்கம் - 3
வர மிளகாய் - 4
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா, மிளகுப் பொடி - ஒன்றரை ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கை
புதினா -1 கை அளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து
ஆட்டு மண்ணீரல் (சுவரொட்டி) இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உடலில் ரத்த அணுக்களின் உற்பத்தியை மிக வேகமாக அதிகரித்து, ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள போலேட் மற்றும் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. வைட்டமின் சி, துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.அத்தகைய சுவரொட்டியில் பொரியல் செய்வது எப்படி என்பது இங்கு பார்க்கலாம்.
செய்முறை:
முதலில் சுவரொட்டியை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் முறையாக சுத்தம் செய்யவில்லை எனில் அது சுவையாக இருக்காது. சுவரொட்டியை விருப்பத்துக்கு ஏற்ப துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் வர மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்றாக வதங்கியதும் மட்டன் சுவரொட்டியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா மிளகுத்தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும் சுவரொட்டி நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும். சுவரொட்டி நன்றாக வெந்ததும் கொத்தமல்லி புதினா கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் தம்மில் விடவும் பின் மட்டன் சுவரொட்டி பரிமாறத் தயார்.
