அதிகமாக எலுமிச்சை டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
அதிகமாக எலுமிச்சை டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
UPDATED : ஆக 31, 2026 07:45 AM
ADDED : ஆக 29, 2026 04:10 AM

எலுமிச்சை டீ ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக குடிப்பது அசிடிட்டி, பல் எனாமல் பாதிப்பு, தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
எலுமிச்சை டீ எப்போது ஆபத்தாகிறது?
எலுமிச்சை டீ மிகவும் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. அதில் தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நன்மைகளும், எலுமிச்சையின் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைக்கிறது. பெரும்பாலானோருக்கு இது அளவோடு குடிக்கும்போது பாதுகாப்பானது. இருப்பினும், தொடர்ந்து அல்லது அளவுக்கு அதிகமாக அருந்துவது சில உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
நெஞ்செரிச்சலை அதிகரிக்கலாம்
எலுமிச்சையில் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகம். குறிப்பாக, வெறும் வயிற்றில் இதை அடிக்கடி குடிக்கும்போது, அது செரிமான மண்டலத்தைப் பாதித்து நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களின் பாதுகாப்பு கவசமான எனாமலை படிப்படியாக பலவீனமாக்கும். இதனால் பற்களில் கூச்சம் ஏற்படுவதோடு, எனாமல் அரிப்பு அபாயமும் அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்க, எலுமிச்சை தேநீர் குடித்தவுடன் சாதாரண தண்ணீரால் வாயை நன்றாகக் கொப்பளிப்பது நல்லது. மேலும், அமிலத்தன்மை கொண்ட பானங்களை அருந்திய உடனே பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் டீத்துாளில் காபின் உள்ளது. அதிகப்படியான காபின் உடல் நலம் மற்றும் தூக்கத்தைப் பாதிக்கும். இரவில் தூக்கம் பாதிப்பது, படபடப்பு மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வர செய்யலாம். குறிப்பாக, கர்ப்பிணிகள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் காபினுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்கள் எலுமிச்சை டீ குடிக்கும் அளவை கண்காணிக்க வேண்டும்.
பலர் எலுமிச்சை டீயில் அதிகளவு சர்க்கரை சேர்த்து குடிக்கிறார்கள். இது பானத்தின் ஆரோக்கிய நன்மைகளை குறைப்பதோடு, தேவையற்ற கலோரிகளையும் அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை உட்கொள்வதால், உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அளவு உயர்வு மற்றும் மெட்டபாலிசம் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எலுமிச்சை தேநீர் உடலுக்குப் புத்துணர்ச்சி தந்தாலும், அது குடிநீருக்கு மாற்றாகாது. உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைப் பெறப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். எலுமிச்சை தேநீரை அளவோடு குடிப்பது பாதுகாப்பானது. இதில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பதும், வெறும் வயிற்றில் குடிப்பதைக் தவிர்ப்பதும் நல்லது. முக்கியமாக, இதைக் குடித்த பிறகு வாயைக் கொப்பளிக்க மறக்கக்கூடாது.
எலுமிச்சை டீ குடித்த பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று அசவுகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக அதன் அளவைக் குறைப்பது அவசியமாகும். ஒருவேளை இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
