/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கோடையின் வரப்பிரசாதம் கொன்றை பூ - தங்கத்திற்கு நிகரானது ஏன் தெரியுமா?
/
கோடையின் வரப்பிரசாதம் கொன்றை பூ - தங்கத்திற்கு நிகரானது ஏன் தெரியுமா?
கோடையின் வரப்பிரசாதம் கொன்றை பூ - தங்கத்திற்கு நிகரானது ஏன் தெரியுமா?
கோடையின் வரப்பிரசாதம் கொன்றை பூ - தங்கத்திற்கு நிகரானது ஏன் தெரியுமா?
ADDED : மே 04, 2023 09:01 AM

கோடைக்காலம் பல வித நன்மைகளை அள்ளித்தரும் அற்புதமான பருவகாலம் என்று சொன்னால் மிகையாகாது. இந்த பருவத்தில் தான் இயற்கை அளிக்கும் பல்வேறு அற்புதமான உணவு வகைகளும், மருத்துவ குணம் வாய்ந்த செடி, மரங்கள் பலன் தரும் காலமாகும். நொங்கு, மாம்பழம், வேர்கடலை, முந்திரி, இலந்தை என இந்த பருவத்தில் கிடைக்கும் பொருட்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட இந்த பருவகாலத்தில் கிடைக்கும் அற்புதமான மலர் தான் கொன்றை மலர்கள்.
கொன்றை மரம் ஆண்டு முழுவதும் பூக்காது. மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். மரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தி வைத்தது போல், சாலை முழுவதும் அழகு சேர்க்கும். இதற்கு உதாரணமாகச் சங்க கால இலக்கியங்களான, அகநானூற்றில்,' பைங்காற் கொன்றை மெல் பிணி அவிழ என்றும், ஐங்குறுநூற்றில்,'பொன்னென மலர்ந்த கொன்றை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொன்றை மலர்கள் கேரளாவின் மாநில மலர் ஆகும். சித்திரை மாதத்தில் வரும் விஷு பண்டிகையின் போது, செல்வந்தர்கள் தெய்வத்தை தங்கத்தால் அலங்காரம் செய்வார்கள். ஆனால் தங்கம் இல்லை என்று சொல்லக்கூடிய ஏழைகள், தங்கத்திற்குப் பதிலாக இந்த பூக்களை கொண்டு அலங்காரம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பல அற்புதம் வாய்ந்த மலரானது மகத்தான மருத்துவ குணத்தையும் கொண்டதாகும்.
இந்திய ஆயுர்வேதத்தில் இந்த மரத்தை ராஜ மரம், தங்க மலை மரம் மற்றும் அரக்கு வதா என்று குறிப்பிடப்படுகிறது. 'அரக்கு வதா' என்றால் நோய்களை கொல்லும் மரமாகும்.
பயன்கள்
சரக்கொன்றை பூக்களை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது நோய்கள் குணமாகும்.
கொன்றை பூவை ஆவியில் வேகவைத்து சாறு பிழிந்து அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கால் லிட்டர் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
தேமல், சொறி, சிரங்கு உள்ளவர்கள், கொன்றை பூக்களை கார்போக அரிசியுடன் சேர்த்து அரைத்து பூசி வந்தால் குணமாகும்.
கொன்றை மர இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
கொன்றை பூக்களை அரைத்துக் காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் உள் உறுப்புகள் பலம் பெறும். உடல் ஆரோக்கியமாகும்.
கொன்றை பூக்களை அரைத்து 10கிராம் அளவு எடுத்து பசுவெண்ணெயில் குழைத்து சேர்த்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள் உள்ளிட்டவை சரியாகும்.
இப்படிப் பல அற்புத பலன்களை கொண்டிருக்கும் இந்த மலர்களை வைத்து பண்டைய காலங்களில் மாம்பழங்களை பழுக்க வைத்துள்ளனர். இப்படி பழுக்க வைப்பதனால், சுவையும், மணமும் கூடுவதோடு ஆரோக்கியமும் கிடைத்துள்ளது.
அதற்கு ஒரு மண்பானையின் அடியில் வைக்கோலை நிரப்பி, அதில் மாங்காய்களை வைத்து அடுக்கி, பிறகு அதன் மீது கொன்றை பூக்களை வைத்து துணியால் நன்றாக கட்டி விட வேண்டும். பிறகு 5 நாட்களுக்கு வைத்திருந்தால் மாம்பழங்கள் பழுத்து விடும். ரசாயனம் கலக்காமல் இயற்கையாக பழுக்க வைப்பதால், சுவையும், ஆரோக்கியமும் இந்த முறையில் அதிகரிக்கும்.

