UPDATED : மே 24, 2026 12:13 PM
ADDED : மே 23, 2026 04:10 AM

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பஸ், ரயில் வண்டிகளில், சினிமா தியேட்டர், பள்ளி, அலுவலகம், வீடுகளில், சோபா, கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலஉடல் உபாதைகள் உருவாகிறது. காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்.
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் முறை:
நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடலாம். எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுவது நல்லது. பேசிக் கொண்டு, 'டிவி' பார்த்து கொண்டு சாப்பிட கூடாது.
சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காமல், இறுதியில் தண்ணீர் குடிக்கலாம். அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம். பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும். இரவு உணவில், முள்ளங்கி, கீரை சேர்க்க வேண்டாம். சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடலாம். சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின் சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம். காலை, 7:00 முதல் 9:00 மணி, மதியம், 1:00 - 3:00 மணிக்குள், இரவு, 7:00 - 9:00 மணிக்குள் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.
