UPDATED : ஆக 31, 2026 07:26 AM
ADDED : ஆக 29, 2026 04:11 AM

ஏ.ஐ., பயன்பாடு நமது நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை பாதிக்குமா? உலக மூளை தினத்தில் நரம்பியல் நிபுணர் அளிக்கும் முக்கிய விளக்கங்கள் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பதற்கான எளிய வழிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22-ஆம் தேதி உலக மூளை தினம் அனுசரிக்கப்படுகிறது. மூளை ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நினைவாற்றல், கற்றல், பகுத்தறிவு மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. கேள்விகளுக்குப் பதிலளிப்பது, மின்னஞ்சல்கள் எழுதுவது, ஆவணங்களை சுருக்குவது முதல் கால அட்டவணைகளை திட்டமிடுவது வரை, நாம் வேலை செய்யும் மற்றும் கற்கும் முறையை மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், ஏ.ஐ.,- அதிகம் சார்ந்திருப்பது நமது நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் பாதிக்குமா? என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் ஏ.ஐ.,- சார்ந்திருப்பது, தகவல்களை நினைவில் கொள்வதற்கும், சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பதற்கும் நாம் செலவிடும் மன உழைப்பை குறைக்கக்கூடும்.
மூளை ஒரு தசை போன்றது!
நாம் உடற்பயிற்சி செய்யும்போது எப்படி உடலின் தசைகள் வலுவடைகிறதோ, அதேபோல மூளையும் தினமும் யோசிக்கும்போதுதான் சுறுசுறுப்பாக இருக்கும். அனைத்து பதில்களுக்கும் ஏ.ஐ.,-ஐ மட்டுமே நம்பியிருந்தால், நமது சொந்தமாக யோசிக்கும் திறனும், சுய நம்பிக்கையும் நாளடைவில் குறைந்துவிடும்.
'காக்னடிவ் ஆப்லோடிங்' என்றால் என்ன?
எதையும் நாம் மூளையில் நினைவில் வைத்துக்கொள்ளாமல், மொபைல் அல்லது ஏ.ஐ.,-யிடம் ஒப்படைத்துவிட்டு நாம் சும்மா இருப்பதே 'காக்னடிவ் ஆப்லோடிங்' என்கிறார்கள் நிபுணர்கள்.
இது மன சுமையை குறைத்து வேலையை எளிதாக்கினாலும், அதிகளவில் சார்ந்திருப்பது நினைவுகூரும் திறன், கவனம் செலுத்தும் திறன் மற்றும் சுயமாக சிக்கல்களை தீர்க்கும் திறன் ஆகியவற்றை படிப்படியாக பலவீனப்படுத்தக்கூடும்.
மாணவர்கள் ஏ.ஐ., உதவி மூலம் வீட்டுப்பாடத்தை முடித்தால், தேர்வின்போது சொந்தமாக எழுதுவதில் சிரமத்தை சந்திப்பார்கள். அதேபோல், வேலைக்குச் செல்பவர்கள் ஏ.ஐ., கொடுக்கும் தகவலை அப்படியே நம்பினால், அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும்.
ஏ.ஐ., தரும் தகவல்கள் எப்போதும் 100 சதவீதம் சரியானவை அல்ல!
சில நேரங்களில் ஏ.ஐ., முழுமையற்ற, காலாவதியான அல்லது தவறான பதில்களை உருவாக்கக்கூடும். அதனால் ஏ.ஐ., கொடுப்பதை அப்படியே நம்பாமல், இது சரியா? என்று யோசித்து பதில்களை மதிப்பீடு செய்து, சரிபார்த்து, கேள்வி கேட்க வேண்டும். ஏ.ஐ., ஆதிக்கம் செலுத்தும் உலகில் சுயமான முடிவெடுக்கும் திறனை வளர்ப்பது அவசியமாகும்.
