UPDATED : ஜூலை 20, 2022 02:30 PM
ADDED : ஜூலை 20, 2022 12:52 PM

பாதத்தில் தோன்றும் வெடிப்பு, சேற்றுப் புண் போலானதுதான் கால் ஆணியும். இது பெரும்பாலும் அதிக வெப்பம் , அலர்ஜி, கிருமித் தொற்று போன்றவற்றால் ஏற்படக்கூடும். அதிகப்படியான அழுத்தத்தால் வளரக்கூடிய இறந்த செல்களின் தொகுப்புதான் கால் ஆணி என்பது. காலில் ஆணி வந்தால் முதலில் ஒருவித அழுத்தம் தருவதுபோல் இருக்கும், கவனிக்காமல் விட்டால் பாதத்தை தரையில் ஊன்ற முடியாத அளவிற்கு வலியை தரக்கூடும்.
கால் ஆணி அறிகுறிகள் :
![]() |
கால் ஆணியின் முதல் அறிகுறியாக பாதத்தின் தோல்பகுதி கடினமானதாக மாறும். பாதத்தில் சிறு கொப்புளங்கள் கூட இப்படி மாறக்கூடும் என்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாகவோ தோற்றமளிக்கும். அந்த இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் நடக்கும். பின் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
காலணியும் காரணம் :
இது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். நெகிழியால் செய்யப்பட்ட செருப்பு போன்று வெப்பம அதிகரிக்கும் காலணிகளை அணிவதாலும் அதிகம் வருகிறது, இதனால், காலணிகளைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை.
கால் ஆணி வகைகள் :
கடினமாக, மென்மையாக அல்லது விதை போன்றும் கால் ஆணி இருக்கலாம். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் ரப்பர் போன்று இருப்பது மென்மை என்றும். பாதத்தின் அடிப்பகுதியில் சிறிய அளவில் இருந்தால் விதை ஆணி எனப்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் தடிமனாகி கடினமாதாக மாறும்.
மருத்துவரை எப்போது அணுகலாம்?
சுய மருத்துவம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பகுதியைக் கீறி ஆணியை எடுக்க முயன்றால் தொற்று பாதிப்பு வரலாம். பாதங்களின் இதர பகுதிகளிலும் பரவி பாதிப்பு தீவிரமடையலாம்.
பொறுத்துக் கொள்ள முடியாத வலி, நடப்பதில் சிரமம் என பாதிப்பு தீவிரமடையும் முன்பே 'போடியாட்ரிஸ்ட்' (Podiatrist) எனப்படும் கால்களுக்கான சிகிச்சை அளிக்கும் பிரத்யேக மருத்துவரை அணுகலாம்
கால் ஆணியை தவிர்க்க சில டிப்ஸ்:
![]() |
• மிக இறுக்கமான காலணிகள் அணிவது, சாக்ஸ் அணியாமல் ஷூ அணிவது போன்றவற்றால் பாதத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது.
• இப்பாதிப்பு உள்ளவர்களின் செருப்புகளைப் பயன்படுத்துவதாலும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
• இப்பிரச்னை உள்ளவர்கள் காலணிகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.
• வெது வெதுப்பான நீரில், கல் உப்பு கலந்து கால்களை 10 நிமிடங்கள் பாதங்களை வைத்தால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்• பாத வெப்பத்தை குறைக்க, பாதங்களில் ஆமணக்கு எண்ணெய் தடவலாம். மாதம் இரண்டு முறை பாதங்களில் மருதாணி வைக்கலாம்.



