UPDATED : பிப் 16, 2023 09:15 PM
ADDED : பிப் 16, 2023 05:21 PM

இயற்கை நமக்கு அளித்த சர்வரோக நிவாரணி ஓமம். பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஓம நீர் உடலுக்கு பலவித நன்மைகளைச் செய்கிறது. ஓம நீரின் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
முதலில் ஓம நீர் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுத்து பின்னர் அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர், கால் கப் தண்ணீர் ஆகும்வரை கொதிக்க வைக்கவும். இள மஞ்சள் நிர ஓம நீரை இறக்கி வடிகட்டவும். பெரியவர்கள் ஓம நீரை அப்படியே அருந்தலாம். குழந்தைகளுக்கு சுவை சேர்க்க இதில் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்த வைக்கலாம்.
நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓம நீரைப் பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாக உள்ளது. ஓமத்தை ஈரத் துணியில் கட்டி நுகர்ந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். முகம் புத்துணர்ச்சி பெறும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளை சரி செய்ய ஓம நீர் பயன்படுகிறது. வாய்வு, வயிற்றுப் பிடிப்பு, மலச்சிக்கல் ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓம நீர் சிறந்த மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஓம நீர் நல்ல ஆற்றலைத் தரும். வறட்டு இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமம் மருந்தாக உள்ளது.
![]() |
மாதவிடாய் சுழற்சி சரிவர இயங்கவும் பெண்களின் சிறுநீர் கழிக்கும் பாதையை கெட்ட பாக்டீரியா தொற்றின்றி சுத்தமாக வைத்துக்கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி ஓம நீரை அருந்தினால் சரியாகும். அல்சர், கேஸ்ட்ரைடிஸ் உள்ளிட்ட வயிற்று உபாதைகளுக்கும் ஓமம் சிறந்த மருந்தாக இருக்கும். தினசரி ஒரு கிளாஸ் ஓம நீர் அருந்துவது உடலின் பலவித நோய்களை குணப்படுத்த உதவும்.

