UPDATED : செப் 20, 2026 11:09 AM
ADDED : செப் 19, 2026 04:14 AM

மழைக்காலம் வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், இந்த காலத்தில் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயம் அதிகமாக இருக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் வேகமாக பெருகி, புட் பாய்சன், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மழைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தவிர்க்க வேண்டிய 6 முக்கிய உணவுப் பாதுகாப்பு தவறுகளை இங்கு பார்க்கலாம்.
நீண்ட நேரம் வெளியே வைத்த உணவை சாப்பிடுவது
சமைத்த உணவுகளை பல மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் பாக்டீரியாக்கள் வேகமாக பரவ செய்யலாம். குறிப்பாக சாதம், இறைச்சி, பால் சார்ந்த உணவுகள் விரைவில் கெட்டுப்போகும்.
எப்.எஸ்.எஸ்.எ.ஐ., மற்றும் சி.டி.சி., ஆகியவை, சமைத்த உணவுகளை 2 மணி நேரத்திற்கும் மேல் அறை வெப்பநிலையில் வைக்கக் கூடாது என்று பரிந்துரைக்கின்றன. சமைத்த 2 மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள் அல்லது பிரிட்ஜில் வைத்து சேமியுங்கள்.
சுத்தமில்லாத குடிநீரை அருந்துவதுமழைக்காலத்தில் பரவும் ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் ஈ, காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு சுத்தமற்ற குடிநீரை பருகுவதே முக்கிய காரணமாகும்.
சாலையோர உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது
மழைக்காலத்தில் திறந்த வெளியில் வைக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் சாட் வகைகளில் ஈக்கள், தூசி மற்றும் மாசுபட்ட காற்று எளிதில் படிந்துவிடும். மழைக்காலத்தில் சுற்றிலும் நீர் தேங்கி இருப்பதால், இத்தகைய திறந்தவெளி உணவுகளை உண்பது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் புட் பாய்சனுக்கு வழிவகுக்கும்.
காய்கறி, பழங்களை சரியாக கழுவாமல் பயன்படுத்துவது
சந்தையில் இருந்து வாங்கி வரும் பழங்கள், காய்கறிகளின் மேற்பரப்பில் மண், பூச்சிக்கொல்லி எச்சங்கள் அல்லது கிருமிகள் இருக்கலாம். மழைக்காலத்தில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது. எனவே, சமைப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன்பாக காய்கறிகளையும் பழங்களையும் சுத்தமான குடிநீரில் நன்றாகக் கழுவுவது அவசியமாகும்.
கைகளை கழுவாமல் உணவு தயாரிப்பது அல்லது சாப்பிடுவது
கைகளை கழுவாமல் உணவுகளை தொடும்போது கிருமிகள் உணவுக்குள் எளிதில் பரவுகின்றன. உணவு சமைப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை பயன்படுத்திய பிறகு சோப்பு கொண்டு குறைந்தது 20 விநாடிகள் கைகளை கழுவுவது உணவு மூலம் பரவும் நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அறிகுறிகள் 24-48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தால், அல்லது கடுமையான நீரிழப்பு, மயக்கம், மலத்தில் ரத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஓ.ஆர்.எஸ்., கரைசல் அல்லது போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் முக்கியம்.
