UPDATED : செப் 27, 2026 11:49 AM
ADDED : செப் 26, 2026 06:00 PM

கோவை நகரில் சில மாதங்களாக புதுவிதமான பொழுதுபோக்கு ஒன்று, இளைஞர்கள் முதல் குடும்பத்தினர் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அதுதான் 'டஃப்டிங்'(Tufting) ஒர்க்ஷாப்!
கம்பளி நூலைப் பயன்படுத்தி, பிடித்த டிசைன்களை உருவாக்கி, அதனை சிறிய கார்பெட், வால் ஹேங்கிங், குஷன் போன்ற அழகான பொருட்களாக மாற்றுவதுதான் டஃப்டிங்.
வெளிநாடுகளில் டஃப்டிங் ஒர்க்ஷாப் அனுபவத்தை பார்த்து ரசித்த தொழில்முனைவோர் தேஜஸ்வினிக்கு, அந்த அனுபவம் மிகவும் பிடித்துப்போனது.
“ஒரு நாள் முழுக்க இதிலேயே நேரம் செலவழித்தாலும் சலிப்பே வரவில்லை. மனதுக்கு மிகவும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. குறிப்பாக மன அழுத்தத்தை நன்றாகவே விரட்டுகிறது” என்கிறார் அவர்.
கோவையிலும் இதுபோன்ற ஒரு கிரியேட்டிவ் கம்யூனிட்டியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தேஜஸ்வினிக்கு ஏற்பட்டது.
இதன் விளைவு, கடந்த 4 மாதங்களாக கோவையில் உள்ள கஃபேக்கள், நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் டஃப்டிங் ஒர்க்ஷாப்கள் களைகட்டுகின்றன. அனைத்து வயதினரும் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.
“மக்கள் ஒன்றாக பேசிக்கொண்டு, தங்களது கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் ஒரு கம்யூனிட்டியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை தொடங்கினேன்” என்கிறார் தேஜஸ்வினி.
'The Knot Kidding' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், நடைபெற உள்ள டஃப்டிங் ஒர்க்ஷாப்கள் மற்றும் புதிய அப்டேட்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. தொடர்புக்கு: 99424 72832.
