UPDATED : அக் 24, 2026 04:28 AM
ADDED : அக் 24, 2026 04:26 AM

மாலை நேரத்தில் தேநீருடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான பழக்கம். தொலைக்காட்சி பார்க்கும்போதும், வேலைக்கு இடையில் பசி எடுக்கும்போதும் சிப்ஸ் பாக்கெட்டை திறந்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். எப்போதாவது சிப்ஸ் சாப்பிடுவது பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்குப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தாது. ஆனால், தினமும் சிப்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தால் சில உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சிப்ஸில் உள்ள அதிகப்படியான கலோரிகளும் உப்பும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். அதுமட்டுமின்றி, அதிக வெப்பத்தில் சிப்ஸ் தயாரிக்கும்போது உருவாகும் சில வேதிப்பொருட்கள் குறித்தும் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1. உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது
தினமும் சிப்ஸ் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய முக்கியமான பாதிப்புகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பதாகும். சிப்ஸில் குறைந்த அளவிலேயே அதிக கலோரிகள் இருக்கலாம். மேலும், அவற்றை எளிதாகவும் விரைவாகவும் அதிக அளவில் சாப்பிட்டுவிட முடியும் என்பதால், நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவை கவனிக்காமல் போகலாம். வழக்கமான உணவுடன் கூடுதலாக தினமும் சிப்ஸ் சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையானதைவிட அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடுவதால், காலப்போக்கில் அது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
உணவுப் பழக்கவழக்கங்களுக்கும் நீண்டகால உடல் எடை மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்பட்டது. இதில், உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிகமாக உட்கொள்வது நீண்டகால உடல் எடை அதிகரிப்புடன் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்புடையது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2. ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம்
உருளைக்கிழங்கு சிப்ஸில் சுவைக்காக அதிகளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. தினமும் சிப்ஸ் உட்கொள்ளும்போது உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. ஊறுகாய், அப்பளம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற பிற உப்பு நிறைந்த உணவுகளையும் சேர்த்து உட்கொள்ளும்போது, மொத்த சோடியம் அளவு மேலும் அதிகரிக்கிறது. உணவில் சோடியம் அதிகமாக இருப்பது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாகலாம். கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் நீண்டகாலத்தில் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற இதய ரத்தநாளப் பாதிப்புகளுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. சிப்ஸ் வாங்கும்போது அதன் ஊட்டச்சத்து விவரங்களைக் கவனிப்பது அவசியம்.
3. நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கலாம்
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம். அதை எண்ணெயில் பொரிக்கும்போது கலோரிகளும் கொழுப்பும் அதிகரிக்கலாம். சிப்ஸின் வகை மற்றும் தயாரிப்பு முறையைப் பொறுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் தாக்கமும் மாறுபடலாம்.
4. செரிமானப் பிரச்சினைகள் வரலாம்
சிப்ஸில் நார்ச்சத்து பொதுவாக குறைவாக இருக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை போல சிப்ஸ் அதிக அளவில் நார்ச்சத்தை வழங்குவது கிடையாது. நார்ச்சத்துக் குறைபாடுள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதேபோல், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த சிப்ஸ், சிலருக்கு அஜீரணம் மற்றும் வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, சிப்ஸ் மட்டுமே சிற்றுண்டியாக சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
5. புற்றுநோய் அபாயம் பற்றிய உண்மை
உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து உணவுகளை அதிக வெப்பநிலையில் வறுக்கும்போது 'அக்ரிலமைடு' என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இது குறிப்பாகப் பொரித்த மற்றும் அதிகமாகப் பொன்னிறமாக அல்லது கருகும் அளவுக்கு சமைக்கப்பட்ட சில உணவுகளில் காணப்படுகிறது. விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அதிக அளவிலான அக்ரிலமைடு வெளிப்பாட்டுக்கும் புற்றுநோய் அபாயத்துக்கும் தொடர்பு காணப்பட்டுள்ளது. ஆனால், மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இதுவரை தெளிவான ஒரே முடிவை வழங்கவில்லை.
