/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கோவில்கள் நிறைந்த அக்கயம்மா பெட்டா
/
கோவில்கள் நிறைந்த அக்கயம்மா பெட்டா
ADDED : மே 07, 2025 11:26 PM

பெங்களூரில் இருந்து சூரியன் உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்க அக்கயம்மா பெட்டா சிறந்த இடமாகும்.
பெங்களூரில் இருந்து கெம்பே கவுடா சாலையில் எலஹங்காவின் சிக்கஜாலா கோட்டை அமைந்து உள்ளது. இந்த கோட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இச்சிறிய மலை உள்ளது.
மலையின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகளும், கார்கள் செல்ல சாலையும் அமைக்கப்பட்டு உள்ளன. படிக்கட்டுகளில் சிறிது துாரம் ஏறினால், இடது புறத்தில் சிறிய குளம் அமைந்து உள்ளது. மழை காலத்தில், குளத்தில் லில்லி மலர்கள் பூத்து குலுங்குவதை பார்க்க சூப்பராக இருக்கும்.
படிக்கட்டுகள் பெரியவர்கள் ஏற வசதியாக கட்டி உள்ளனர். அமர்ந்து ஓய்வும் எடுத்து கொள்ளலாம். மலையில் ஆங்காங்கே சிறிய தொட்டிகள் கட்டி உள்ளனர். இதில் தேங்கும் நீரை பறவைகள், விலங்குகள் பருகுகின்றன.
படிக்கட்டுகள் வழியாக செல்லும்போது பெரிய வளைவு உங்களை வரவேற்கும். அதை கடந்து சென்றால், ராமர் கோவில், பீமேஸ்வரா கோவில், முனீஸ்வரர் கோவில், அக்கயம்மா கோவில் அமைந்துள்ளன. அது தவிர, குகையில் கவி மகேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.
ஆனால் இக்கோவில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்குமாம். மற்ற நாட்களில் கோவில் மூடப்பட்டு இருக்கும். இது தவிர, பத்து அடி உயரத்தில் சிவன் - பார்வதி சிலையும் உள்ளது. இச்சிலை முன் சிறிய குளம் அமைந்து உள்ளது.
கவி மகேஸ்வரி அம்மன் கோவில் அருகில் சூரியன் உதயத்தையும், பீமேஸ்வரா கோவில் பின் புறம் பகுதில் சூரியன் அஸ்தமனத்தையும் பார்க்கலாம். மலையில் இருந்து பார்த்தால், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் தெரியும். விமானங்கள் ஏறி, இறங்குவதை கண்டு ரசிக்கலாம்.
மலையில் ஒரு கடை தான் உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நாட்களில் தான் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இங்கு வருவதாக இருந்தால் தின்பண்டங்கள், தண்ணீர், தொப்பி, கூலிங் கிளாஸ் கொண்டு வருவது சிறந்தது.
காலை 6:00 அல்லது மாலை 5:00 மணிக்கு இங்கு செல்வது சிறந்தது. மாலை 6:00 மணிக்கு பின், ஓலா, ஊபர் டாக்சிகள் கிடைப்பது சிரமம். எனவே, 6:00 மணிக்கு முன்னதாகவே, மலையில் இருந்து இறங்கிவிடுவது சிறப்பு. குடும்பத்துடன் பொழுது போக்கவும், சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்கவும் ஏற்ற இடம்.
- நமது நிருபர் -