/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
காட்டுக்கு நடுவில் 'கேம்ப்' கொண்டாட்டம்!
/
காட்டுக்கு நடுவில் 'கேம்ப்' கொண்டாட்டம்!
ADDED : ஏப் 16, 2025 11:39 PM

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும், கோடை விடுமுறை என்றால் சொல்லவே தேவையில்லை. வீட்டில் உள்ள குட்டீசை கையால் பிடிக்க முடியாது. எங்காவது அழைத்து செல்லும்படி நச்சரிப்பர்.
இந்த மாதிரி சமயத்தில், எங்கு அவர்களை அழைத்து செல்வது என குழப்பமாக இருக்கும். உங்கள் குழப்பத்திற்கான விடையாக இக்கட்டுரை இருக்கும்.
ராம்நகர் மாவட்டம், கனகபுராவில் அமைந்து உள்ளது பீமேஸ்வரி சாகச மற்றும் இயற்கை முகாம். உடனே ராம்நகரா அவ்வளவு துாரமா என அச்சப்பட வேண்டாம். இது கிழக்கு பெங்களூரில் இருந்து 100 கி.மீ., தொலைவிலும், மைசூரில் இருந்து 85 கி.மீ., தொலைவிலும் அமைந்து உள்ளது.
பீமேஸ்வரி சாகச மற்றும் இயற்கை முகாமில், மலையேற்றம், நீரில் விளையாடப்படும் விளையாட்டுகள், படகு சவாரி, ஜிப் லைன், கயிற்றில் நடப்பது போன்ற பல சாகச விளையாட்டுகள் உள்ளன.
இப்பகுதியில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மலபார் ராட்சத அணில், நரிகள், முதலைகள், பாம்புகள், ஆமைகள், 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பறவைகளின் வரத்து அதிகமாக இருக்கும்.
இங்கு வருபவர்களுக்கு வரவேற்பு பானம், மதிய உணவு, மாலை தேநீர், காபி, ஆகியவை அளிக்கப்படுகிறது. குடும்பத்துடன் தங்கி, ஓய்வு எடுப்பதற்காக ஒரு சிறிய அளவிலான வீடும் உள்ளது. அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும். இரவு தங்கி கொள்வதற்கும் அனுமதி உண்டு. அப்போது, நெருப்பு மூட்டி மகிழும் வகையில், 'பயர் கேம்ப்' ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதில், பொருட்களை வைத்து கொள்ளும் வகையில் லாக்கர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படுகிறது. சிறுவர்களுக்கு 1,475 ரூபாயும், பெரியவர்களுக்கு 2,950 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இங்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் பொருட்கள்: அடையாள அட்டை, கேமரா, செல்பி ஸ்டிக், சன் கிளாஸ், தொப்பி, மருந்துகள், சன் ஸ்கிரீன், பவர் பேங்க் ஆகியவை எடுத்து செல்லலாம். கேமரா, வீடியோ கேமராவை எடுத்து செல்வதற்கு கட்டணம் கிடையாது.
அனுமதிகப்படாத பொருட்கள்: மது, சிகரெட், பிளாஸ்டிக் கவர், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள், செல்லப்பிராணிகள், நொறுக்கு தீணிகள், ஸ்கேட்டிங் செய்யும் உபகரணங்கள் ஆகியவை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
- நமது நிருபர் -