/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சாகச பிரியர்களை கவரும் ராணிபுரா மலை
/
சாகச பிரியர்களை கவரும் ராணிபுரா மலை
ADDED : அக் 16, 2025 05:52 AM

தட்சிணகன்னடா மாவட்டம், கர்நாடகாவின், கடலோர மாவட்டமாகும். அழகான கடற்கரைகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள், புராதன கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் இடங்கள் ஏராளம். இதில், பசுமையான ராணிபுரா மலையும் ஒன்றாகும்.
மழை குறைந்ததால், பலரும் சுற்றுலா தலங்களுக்கு படை எடுக்கின்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள் மலையேற்றம் செல்வதில், ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கையை ரசிப்பதுடன், மலையேறி சாகசம் செய்ய விரும்புவோர், ராணிபுரா மலைக்கு வாருங்கள். சொர்க்கத்துக்கு வந்த உணர்வு ஏற்படும். இது கேரளாவின், காசர்கோடுவில் இருந்தாலும், கர்நாடகாவில் இருந்து, அதிகமான சுற்றுலா பயணியர், சாகச பிரியர்கள் செல்கின்றனர்.
தீபாவளி விடுமுறைக்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டால், ராணிபுரா மலையை தேர்வு செய்யலாம். கடல் மட்டத்தில் இருந்து, 3,438 அடி உயரத்தில் உள்ள இம்மலை, சுற்றுலா பயணியரை கைவீசி அழைக்கிறது. மலை அடிவாரத்தில் இருந்து, 5 கி.மீ., நடந்து மலையேறினால், அற்புதமான காட்சிகளை காணலாம். மனதுக்கு இதமளிப்பதுடன், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மலை உச்சியை அடைந்தால் நடந்து வந்த களைப்பும், அலுப்பும் காணாமல் போகும்.
உடலை வருடிச் செல்லும் குளிர்ச்சியான காற்றை அனுபவிக்கலாம். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பச்சை நிற பட்டுச்சேலையை விரித்து வைத்தது போன்றிருக்கும்.
வளைந்து, நெளிந்து ஓடும் ஆறுகளும் மனதை கொள்ளை கொள்ளும். இதற்காகவே இங்கு சுற்றுலா பயணியர் குவிகின்றனர். மலையேற்றத்துக்கும் அதிகமானோர் வருகின்றனர்.
- நமது நிருபர் -