/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
புலி, சிங்கத்தை அருகில் பார்க்க ஷிவமொக்கா 'ஜங்கிள் சபாரி'
/
புலி, சிங்கத்தை அருகில் பார்க்க ஷிவமொக்கா 'ஜங்கிள் சபாரி'
புலி, சிங்கத்தை அருகில் பார்க்க ஷிவமொக்கா 'ஜங்கிள் சபாரி'
புலி, சிங்கத்தை அருகில் பார்க்க ஷிவமொக்கா 'ஜங்கிள் சபாரி'
ADDED : நவ 12, 2025 10:00 PM

- நமது நிருபர் -: விஞ்ஞான உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. மொபைல் போன் மூலம் பல விஷயங்களையும், விரல் அசைவின் மூலம் செய்து முடிக்க முடியும். அதே வேளையில் மரம், செடி, கொடி, பறவை உள்ளிட்ட உயிரினங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு நாம் நேரில் பார்க்கும் பல உயிரினங்களை வரும் காலத்தில் நம் அடுத்த தலைமுறையினர் படத்தில் பார்க்க வேண்டிய சூழல் உருவாகலாம். இதனால், இருக்கும்போதே அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
அவ்வகையில், அடர்ந்த காட்டிற்குள் சென்று அங்கு வாழும் உயிரினங்களை கண்டுகளிப்பது அரிதான விஷயமே. இப்படிப்பட்ட ஒரு இடம் எங்கு உள்ளது? அங்கு செல்வது எப்படி என்பதை பற்றி எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டம், தியவரேகொப்பாவில் உள்ள ஜங்கிள் சபாரி மிகவும் பிரபலமானது. இந்த சபாரியில் பல விலங்குகளையும் அவற்றின் இருப்பிடத்திற்கு சென்றே கண்டுகளிக்கலாம். இது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் அழகையும், பசுமையும், வனவிலங்குகளின் செழிப்பையும் ஒருங்கே இணைக்கும் அற்புதமான இயற்கைத் தலமாக உள்ளது.
ஷராவதி நதி அருகே அமைந்துள்ள 250 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த வனப் பகுதியில் புலி, சிங்கம், சிறுத்தை, யானை, மான், குரங்கு, பல அரிய பறவை இனங்கள் நிம்மதியாக வாழ்கின்றன. இந்த சபாரி சுற்றுலா பயணியருக்கு புதிய அனுபவத்தை நிச்சயம் வழங்கும். மழைக்காலத்தில் குளிர் காற்றில் காட்டுக்குள் சபாரி செல்வது சுகமான அனுபவமாக இருக்கும். அப்போது காடே அழகாக இருக்கும்.
இந்த சபாரியில் காட்டு ராஜாவான சிங்கம், சீறிப்பாயும் சிறுத்தை, 'பாகுபலி' படத்தில் வருவது போல பெரிய அளவிலான காட்டெருமை, புள்ளி மான், சாம்பல் மான், கரடி, மயில், குரங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களை பார்வையிடலாம். மான்கள் ஆடுகள் போல கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்க முடியும். சேட்டை செய்யும் குரங்குகளிடமிருந்து உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இங்கு வருவோர் பிளாஸ்டிக், லைட்டர், மது, சிகரெட் போன்றவை எடுத்து வர அனுமதியில்லை.
முக்கியமாக ஒவ்வொரு சபாரி வாகனத்திலும் டிரைவருடன் வழிகாட்டி ஒருவரும் இருப்பார். அவர் சுற்றுலாப்பயணியருக்கு எப்படி நடந்து கொள்வது, விலங்குகளின் குணாதிசியங்கள் போன்றவற்றை புரியும்படி தெளிவாக விளக்குவார்.
இந்த சபாரி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கிடைக்கும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை. இந்த வனப்பகுதிக்குள் நுழைவதற்கு பெரியவர்களுக்கு 80 ரூபாயும், சிறியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பஸ் சபாரிக்கு பெரியவர்களுக்கு 250 ரூபாயும்; சிறியவர்களுக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதுபோல வாகனங்களுக்கு ஏற்பட பார்க்கிங் கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும்.
இது போன்ற இடங்களுக்கு தங்கள் குழந்தையை பெற்றோர் அழைத்துச் செல்லும்போது, அவர்கள் மொபைல் போன் உபயோகத்திலிருந்து வெளியே வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

