
'ஸ்ரீ கிருஷ்ணரின் சீடரால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட நைவேத்தியமே... குடலை இட்லி' என்கிறது வரலாறு!
உலகளந்த பெருமாள் சன்னதி தெருவில், 'காஞ்சிபுரம் இட்லி' கடை முன் நின்றேன். 'புட்டு குழல்' போன்ற மூங்கில் குழலின் உட்புறத்தில் மந்தாரை இலைகளை ஒன்றன் மீது ஒன்றாய் சுற்றி, அதனுள் மாவு ஊற்றி இந்த இட்லி தயாராகிறது. ஓரடி நீளம், ஒன்றரை கிலோ எடையுடன் 'குழல் இட்லி' என்றும் பெயர் பெற்றிருக்கும் இதனை கூறு போட்டால் 20 இட்லிகள்!
எனது தட்டில் இட்லிகள் கிளப்பிய ஆவியில் மந்தாரை இலை மணமும், நெய் வாசமும்! நல்லெண்ணெய் கலந்த பொடி, புதினா சட்னி, தேங்காய் சட்னியில் பிரட்டி துாக்கிய ஒவ்வொரு இட்லி துண்டிலும் சுக்கோ, முந்திரியோ ஏதோ ஒன்று ருசி கூட்டியது!
மணற்பதத்திலான பச்சரிசி, உளுந்து மாவுடன் நெய்யில் வதக்கிய மிளகு, சீரகம், முந்திரி, கருவேப்பிலை சேர்த்து, தயிர் கலந்து புளிக்க வைத்து தயாராகிறது குடலை இட்லி.
'குடலை இட்லி எளிதில் ஜீரணமாகும்' எனும் அனுபவத்தால் ஆறு இட்லிகளை ரசித்து ருசித்து சன்னதி தெருவில் வயிறு நிமிர்த்தி நடக்கையில், 'நம்ம மாமல்லபுர சிற்பங்களை தொட்டு உணர்ந்ததுல அவாளுக்கு சந்தோஷமாம்!' - பிரான்ஸ் மாற்றுத்திறனாளிகள் சொன்னதாக நாளிதழில் வாசித்ததை, ஆத்துக்காரியிடம் சிலாகித்தபடி கடந்தார் ஒரு பெரியவர். நானும் சிலிர்த்துக் கொண்டேன்.
என்னை சிலிர்ப்பூட்டிய பெரியவர் நீங்களா?
87788 26405