
சுயசிந்தனை கொண்ட இவர்கள் வெள்ளித்திரை நடிகர்களையோ, அரசியல் வியூக நிபுணர்கள் உதவியுடன் அரசியல் செய்பவர்களையோ அண்ணாந்து பார்த்து ஆராதிப்பதில்லை!
இவர்கள்... திருச்சி, தேசிய கல்லுாரியின் இளங்கலை வரலாறு மாணவர்கள்...
'எனது பள்ளி ஆசிரியை மகேஸ்வரி, தனது அப்பாவின் கடன்களுக்கு பொறுப்பேற்று அவற்றை தீர்த்தபின் தன் 32வது வயதில் திருமணம் புரிந்தார். அவரது இச்செயல் தவறு என பலர் விமர்சித்த நிலையிலும், தன் முடிவில் உறுதியாக நின்றார். என் வேர்களுக்கான நீர்... லதா மகேஸ்வரி!'
- ப.காவ்யா, இளங்கலை 3ம் ஆண்டு
'நாம் யார் என உணர்ந்து கொள்ள இந்த சமூகம் வாய்ப்பு தருகிறதா' என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு. இங்கே பெரும்பாலும் ஏதோவொரு சமூக வழக்கத்திற்கு, தத்துவத்திற்கு மனித மனம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இவற்றில் இருந்து விலகி நின்று யோசிக்க உதவும் புத்தரே என் ஆசான்; வழிகாட்டி!'
- சு.வெங்கட கிருஷ்ணன், இளங்கலை 2ம் ஆண்டு
'என் வீட்டில் ஐந்து பெண்கள்; ஆண் துணையில்லாது கூரை வீட்டில் வாழ்க்கை. இன்றும் கூலிக்கு உழைக்கும் என் அம்மா சரஸ்வதியால்தான் எங்களுக்கு சோறு. ஆறாத காயங்கள் மனதில் பெரும் நெருப்பாக எரிந்தாலும் என் அம்மாவிடம் வெறுப்பு தெறிக்காது. அம்மா... நீதான் எனக்கான ஒளி!'
- செ.நிஷா, இளங்கலை 3ம் ஆண்டு