
கிணற்று நீச்சலில் தண்ணீர் பாம்பிடம் கடி; காடுகளில் திரிகையில் சாரை பாம்பின் வாலால் அடி; இந்த அனுபவங்களோடு நெடிதுயர்ந்த தென்னைகளில் ஏறி இறங்கியதும், 'லிப்ட்' கேட்டு லாரிகளில் ஊர் சுற்றியதும் 61 வயதாகும் இவரது பொழுதுபோக்கு! இதிலென்ன தனித்துவம்?
பார்த்திபன்... பார்வை திறனற்றவர்!
'என் கற்பனைக்குள்ளே ஒரு கடல் இருக்கு; அது, நீங்க பார்க்குற கடல் மாதிரியான்னு எனக்குத் தெரியாது; என் கடல்ல எழும்புற அலைகள் நாய்க்குட்டி மாதிரி என் கால்களை அன்பா ஈரப்படுத்திட்டுப் போகும்; ஆமா... என் கற்பனையில ஒரு நாய்க்குட்டியும் இருக்கு!' - 'இன்னும் கொஞ்சம் பேசுங்களேன்' எனச் சொல்ல வைக்கிறது பார்த்திபனின் உலகம்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பார்த்திபனுக்கு சென்னை பள்ளிக்கரணையில் வீடு; இவர் மனைவி கம்லேஷ், ஹரியானாக்காரர்.
அது ஒரு காதல் காலம்
'தொழில் பயிற்சிக்காக டேராடூன் போன இடத்துல எங்க முதல் சந்திப்பு. கம்லேஷ் பயன்படுத்திட்டு இருந்த தட்டச்சு இயந்திரத்துல ஒரு 'கீ' வேலை செய்யலை. சரி பண்ணிக் கொடுத்தேன். மறுபடி மறுபடி அதே பிரச்னை. 'இப்படித்தான் சரி செய்யணும்'னு அவங்க விரல் பிடிச்சு கற்றுக் கொடுத்தேன். அதுக்கப்புறம், 'காதல்... காதல்... காதல்...'னு தட்டச்சு இயந்திரத்துல ஓயாத சத்தம்!' - ஆக...
பார்த்திபன் காதலுக்கு காரணம் அழகான ஒரு ஸ்பரிசம்!
இல்லீங்க... அதைவிட அழகான ஒன்னு இருக்கு; அன்றைய நாட்கள்ல, கேசட்ல குரல் பதிவு பண்ணி பரிமாறிப்போம். தனிமையில ஹெட்போன் போட்டு அதை கேட்குற சுகம்... இப்போ நினைச்சாலும் உள்ளுக்குள்ளே குளிரும்!
புற அழகறியாது அகம் உணர்ந்து வாழும் 'பார்த்திபன் - கம்லேஷ்' காதலை, தன் கண் குளிர 28 ஆண்டுகள் அன்றாடம் பார்த்து ரசித்தவர் மகள் சங்கீதா; தற்போது கோல்கட்டாவில் கணவன் மற்றும் மகளோடு வசிக்கிறார்.
மகள் பிறந்த அந்நாள்... நினைவிருக்கிறதா கம்லேஷ்?
பதற்றத்தோட அவ முகம் தடவிப் பார்த்தப்போ, என் முகத்துல இல்லாத கண்கள் அவ முகத்துல இருந்ததுல எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம். பால் புட்டியை தானே எடுத்துட்டு வந்து எங்க கையில கொடுத்து தனக்கு ஊட்டச் சொன்னதெல்லாம்... ப்ப்ச்ச்ச்... சாமிங்க... எங்க சங்கீதா!
உங்க உலகத்துல பெரும் சுகம் எது பார்த்திபன்?
நாங்க பார்க்காத எங்களை அணுஅணுவா ரசிக்கிற மகள் சங்கீதா, பேத்தி வியாவோட பேரன்பு!
பயணத்தில் ஜன்னலோர இருக்கை கிடைக்கிறதெனில்...
முகம் தழுவ காற்றுக்கு அனுமதி தருவோம். கை கோர்த்துக்கிட்டு அமைதியா இருப்போம். 'இந்த பயணம் முடிஞ்சிடவே கூடாது'ன்னு ஆத்மார்த்தமா வேண்டிக்குவோம்.